சேலத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் டாஸ்மாக் கடை சூப்பர்வைசர், உயிரிழந்த நிலையில், வசூல் பணம் சுமார் 5 லட்சத்தை போலீசிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்களின் செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சேலம் மாவட்டம், வேம்படிதாளம் பகுதியை சேர்ந்தவர் மகுடேசன்(54). கொண்டலாம்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வரும் இவர், நேற்று முன்தினம் நள்ளிரவில் நண்பர் குழந்தைவேலு என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். கொண்டலாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் அருகே உள்ள, மேம்பாலத்தில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த கார், இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மகுடேசன் மற்றும் குழந்தை வேலு இருவரும் காயமடைந்தனர்.
இதையடுத்து, உடனடியாக ஆம்புலன்ஸ்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்புலன்ஸை ஆதிசேஷன் ஓட்டிவந்தார். மருத்துவ உதவியாளர் நடேசன், இவர்கள், மகுடேசனின் உடைமைகளை சோதனை செய்ததில் அவரது பையில் டாஸ்மாக் கடையில் வசூல் செய்யப்பட்ட பணம் ஐந்து லட்சத்து, 62 ஆயிரத்து, 600 இருந்தது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மகுடேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து வசூல் பணத்தை ஆம்புலன்ஸ் ஊழியர்கள் போலீசார் முன்னிலையில் மகுடேசன் உறவினர்களிடம் ஒப்படைத்தனர். இந்த செயலுக்கு அனைவரும் பாராட்டு தெரிவித்தனர்.