சேலத்தில் கோயில் விழாக்களை குறிவைத்து நகைகளை திருடி சுற்றுலா அனுபவித்து வந்த 3 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் எம்ஜிஆர் காலனியில் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இந்த விழாவில் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிலையில் கும்பாபிஷேக கூட்டத்தில் கலந்து கொண்ட 6 பேரிடம் இருந்து நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, புகாரின் பேரில் தாரமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் அழகுதுரை தலைமையில், ஓமலூர் உட்கோட்ட குற்றபிரிவு போலீசார் சிசிடிவி வீடியோ காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில், பெண்களின் கழுத்தில் இருந்த நகைகள் திருடியது தெரியவந்தது. திருட்டில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த சீத்தல், பாலக்காட்டை சேர்ந்த பிரியா, காஞ்சிபுரத்தை சேர்ந்த அனு உள்ளிட்ட 3 மூன்று பேரை போலீசார் கைது செய்து 19 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் போலீசார் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் மூன்று பேரும் காரில் வந்து திருவிழா கூட்டங்களில் நகைகளை திருடி கொண்டு சுற்றுலா தளங்களுக்கு செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். தற்போது மூன்று பேரையும் போலீசார் சேலம் பெண்கள் சிறையில் அடைத்துள்ளனர்.