தீபாவளிக்கு வீடுகளில் இனிப்பு பலகாரம் செய்வதை தவிர்த்து, தற்போது கடைகளில் அதிகளவில் வாங்குகின்றனர். மேலும், அனைத்து நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களுக்கு, ‘ஸ்வீட் பாக்ஸ்’கள் வழங்குகின்றன,இதனால், இரு தினங்களாக இனிப்பு மற்றும் கார வகைகளின் விற்பனை களைகட்டியுள்ளது. இன்று தீபாவளி இனிப்பு பலகாரம் விற்பனையும் உச்சத்தில் உள்ளது. இந்தநிலையில், இனிப்பு வகைகளை தரம்பார்த்து வாங்குவது எப்படி என்பது குறித்து உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.
அதன்படி, “முதலில் அதிக அடர்த்தியான நிறங்கள் கொண்ட பலகாரங்களைத் தவிர்க்க வேண்டும். அதை வாங்குவதும் உண்பதும் உடல் ஆரோக்கியத்திற்குக் கெடுதல். பயன்படுத்தும் எண்ணெய் சரியாக இருக்கிறதா? நெய் சரியாக உள்ளதா என பார்த்து வாங்க வேண்டும். பலர் நெய்யில் செய்வதாகச் சொல்வார்கள். ஆனால் வனஸ்பதியில் செய்திருப்பார்கள். அதாவது வனஸ்பதி என்பது ஹைட்ரஜனேற்றப்பட்ட தாவர எண்ணெய் ஆகும். தீபாவளி நேரங்களில் நிறையப் பலகாரங்களைச் செய்வார்கள். அதிக எண்ணெய் பயன்பாடு இருக்கும். மீந்து போன எண்ணெய்யை மறுநாள் பயன்படுத்துவார்கள். புதிய எண்ணெய்யை மாற்றமாட்டார்கள்.
நாங்கள் ஒரு கடை பரிசோதனை செய்யச் சென்றால், முதலில் அதன் நிறத்தைத்தான் பார்ப்போம். அதைவைத்தே அதன் தரம் எப்படி என்பது பற்றிய ஒரு முடிவை எடுத்துவிடலாம். உதாரணமாக சிலர் லட்டு வாங்குவார்கள். அது சிகப்பு நிறத்தில் இருக்கும். அப்படியான லட்டினை வாங்கக் கூடாது. சிலர் மஞ்சள் நிறத்திலிருந்தால் அது சாதாரண விசயம் என எடுத்துக்கொள்கிறார்கள். அதுவும் ஆபத்துதான். மஞ்சள் நிறமாகத் தெரியவும் செயற்கையாக நிறம் சேர்க்கிறார்கள். இரண்டும் ஆபத்துதான். சாதாரண லட்டுகளை வாங்கலாம். நிறம் முகத்தில் அடிப்பது போல் இருந்தாலே அதைத் தவிர்க்கவேண்டும் ஏனென்றால் 100பிபிஎம் அளவை விட அதிகமாக நிறம் சேர்க்கப்பட்டிருக்கலாம்.
சில கடைகளில் மில்க் ஸ்வீட்ஸ் பண்டங்களில் நிலம், ஸ்கை ப்ளூ, பச்சை கலர், ஆரெஞ்ச் என விதவிதமான கலர்களை மேலே ஒரு லேயராக பயன்படுத்தி இருப்பார்கள். அதை உண்பதால் வயிற்றுப் பிரச்சினைகள் வரக்கூடும். கட்டாயம் இவற்றைக் குழந்தைகளுக்குத் தரக்கூடாது. மிக்சரில் பச்சை நிறம் உள்ள பட்டாணியைப் பயன்படுத்தி இருப்பார்கள். அது உண்மையான பச்சைப் பட்டாணி கிடையாது. ரசாயனம் கலந்த பட்டாணி. முறுக்கு, ஜிலேபி, ஜாங்ரி வகைகளில் கூட சிவப்பு ரசாயன வண்ணத்தைச் சேர்ப்பார்கள். கலர் இல்லாத சாதாரண முறுக்கை வாங்க வேண்டும்.
அதேபோல் இனிப்பு வகைகள் மீது சிலர் பேப்பர் போல ஜொலிக்கும் ஒருவகை பேப்பரை ஒட்டி இருப்பார்கள். அதன் அளவு குறைவாக இருந்தால் தவறில்லை. ஆனால், அதை தொட்டுப் பார்க்கும் போது கையில் அந்த சில்வர் பேப்பர் ஒட்டும் அளவுக்கு இருந்தால், அது ஆபத்து. அதை வாங்கவே கூடாது. இந்த அலுமினிய போன்ற கலவைகள் வயிற்றுக்குக் கெடுதல் தரும். அதிகம் உட்கொள்வதால் கிட்னி கெட்டுப் போகவும் வாய்ப்பு உள்ளது” என்று கூறியுள்ளார்.
Readmore: களைகட்டும் தீபாவளி!. தமிழகத்தில் நாளை அரைநாள் விடுமுறை!. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!