சேலத்தில் கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழையால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும், சாலைகளில் மழை வெள்ளம் தேங்கி போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி சேலம் கந்தம்பட்டி பை-பாஸ் பகுதியில் மழை வெள்ள பாதிப்பு குறித்து பார்வையிட்டு செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருமணமுத்தாற்றின் கரையோரம் இருக்கின்ற வீடுகளில் பல இடங்களில் மழை நீர் புகுந்துள்ளது. கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சேலத்தில் சீரங்கன் தெரு, மீனாட்சிபுரம், சிவதாபுரம் பகுதியில் மழை நீர் தேங்கியுள்ளது.

சேலத்தில் இருந்து இளம்பிள்ளை செல்லும் பிரதான சாலையில், வாகனங்கள் செல்லமுடியாத அளவிற்கு மழை நீர் தேங்கியுள்ளது. சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பாலத்தை தாண்டி மழை வெள்ளம் செல்லக்கூடிய நிலை உள்ளது. அல்லிக்குட்டை, கொண்டலாம்பட்டி பகுதிகளை மழை நீர் சூழ்ந்துள்ளது.

ஏற்காடு மலைப்பகுதியில் பெய்த மழை, சேலம் மாநகரத்தில் பெய்த மழை ஆகியவற்றின் காரணமாக இத்தகையை பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் அந்தந்த பகுதி அதிமுக நிர்வாகிகள் பொதுமக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். தேவையான உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஏற்காடு மலைப்பகுதியில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனை அரசு போர்க்கால அடிப்படையில் சரி செய்ய வேண்டும். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்ட நிர்வாகமும், நெடுஞ்சாலைத்துறையும் வேகமாக, துரிதமாக மண்ணை அகற்றி சாலையை சீரமைக்க வேண்டும்.

மக்களுக்குத் தேவையான போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும். மேலும் ஏற்காட்டில் 22 கிராமங்களுக்கு செல்லக்கூடிய தரைப்பாலங்கள் சேதமடைந்துள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஏற்காட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள புளியங்கடை கிராமத்தில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

திருமணிமுத்தாற்றில் முறையாக தூர்வாராத காரணத்தால் தான் வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. திமுக அரசு, சேலம் மாநகராட்சி சரியாக செயல்படாத காரணத்தால் அடைப்பு ஏற்பட்டு, வெள்ள நீர் நகரத்திற்குள், குடியிருப்பு பகுதியில் புகுந்துள்ளது. உரிய முறையில் முன் எச்சரிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்காது என்று குற்றம்சாட்டினார்.

“சேலம் மாநகர மக்கள் இரவில் தூங்கிக் கொண்டே வா இருந்தார்கள்? எப்போது வீட்டிற்குள் தண்ணீர் போகும் என்ற அச்சத்தில் தான் இருந்தார்கள். அப்படிப்பட்ட நிலைமை தான் தமிழகத்தில் நிலவிக் கொண்டிருக்கின்றது” என்றார். மேலும் இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் பார்வையிட்ட முதலமைச்சர் தூக்கத்தை தொலைத்த ஆட்சி அதிமுக என்றும் கூறியிருந்தார், அதை எதிர்க்கிறேன் என்று இபிஎஸ் கூறினார்.

நான் கேட்கிறேன் தி.மு.க அரசு நடவடிக்கை எடுக்காததால் விழுப்புரம், கடலூர் மற்றும் பல்வேறு மாவட்ட மக்கள் இரவு முழுவதும் தூங்க முடியாமல் இருக்கிறார்கள் மக்களின் தூக்கத்தை தொலைத்த அரசு இந்த திமுக அரசு என்று குற்றம்சாட்டினார்.

Readmore: கனமழை எதிரொலி!. எடப்பாடி சரபங்கா நதியில் வெள்ளப்பெருக்கு!. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை!