கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே கிங்ஸ்லி என்ற தனியார் பள்ளியின் சார்பில் கடந்த 5ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை என்.சி.சி. முகாம் நடைபெற்றது. இந்த முகாமில் 17 மாணவிகள் கலந்து கொண்ட நிலையில், அவர்கள் பள்ளி வளாகத்திலேயே தினமும் தங்கினர். இந்நிலையில், முகாமில் 8ஆம் வகுப்பு மாணவி ஒருவர், பள்ளி ஆடிட்டோரியத்தில் சக மாணவியருடன் தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில், என்.சி.சி. பயிற்சியாளரும், நாம் தமிழர் கட்சியின் முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளரான சிவராமன் (வயது 30) என்பவர், அந்த மாணவியை தனியாக அழைத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சிவராமன் உள்ளிட்ட 11 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், பள்ளி மாணவியை வன்கொடுமை செய்த வழக்கில் கைதான சிவராமன், கைதாவதற்கு ஒருநாள் முன்னதாக எலி பேஸ்ட் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைத் தொடர்ந்து உடல்நலக்குறைவு காரணமாக அவர், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையில், எலி பேஸ்ட் சாப்பிட்டு சிவராமன் உயிரிழந்த நிலையில், அவரது தந்தை அசோக்குமார் (61) குடிபோதையில் கீழே விழுந்து உயிரிழந்தார். காவேரிபட்டனம் அருகே போதையில் கீழே விழுந்த அசோக்குமார், தலையில் காயமடைந்து உயிரிழந்தார். இதையடுத்து, இருவரது உடல்களையும் உறவினர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.