குஜராத்தில் விவசாயி ஒருவர் தனது அதிர்ஷ்ட காருக்கு ரூ.4 லட்சம் செலவில் இறுதி ஊர்வலம் நடத்தி அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அம்ரேலி மாவட்டம் படார்சிங்கே என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் சஞ்சய் போலரே. விவசாயியான இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு தமது சொந்த உபயோகத்துக்காக பிரபல நிறுவனத்தின் கார் ஒன்றை வாங்கி உள்ளார். கார் வாங்கிய தருணம், அவரின் வாழ்க்கையை மேன்மைக்கு கொண்டு சென்றது. தமது அனைத்து முன்னேற்றத்துக்கும் கார் வந்த சமயமே காரணம் என்று எண்ண ஆரம்பித்தார். அதன் காரணமாக ராசியான காரை, தமது வீட்டில் ஒருவராக நினைத்து பூஜித்து வந்துள்ளார்.

இந் நிலையில் ஆண்டுகள் பல கடந்துவிட்டதால் காரை யாருக்கும் தராமல் தனது சொந்த நிலத்தில் அடக்கம் செய்ய எண்ணினார். எப்போதும் எங்களின் நினைவில் கார் இருக்க வேண்டும் என்பதற்காக காருக்கு சமாதி கட்ட அவர் திட்டமிட்டார். இதற்காக பத்திரிகை அடித்து கார் அடக்கம் செய்யும் நாளன்று அவசியம் வருமாறு ஊரில் உள்ள அனைவருக்கும் விநியோகித்தார்.

அந்த நாளும் வர, ஆயிரக்கணக்கான ஊர்மக்கள் முன்னிலையில் தமது அதிர்ஷ்ட காரை சொந்த நிலத்தில் அடக்கம் செய்தார். இதற்காக அவர் ரூ.4 லட்சம் வரை செலவு செய்துள்ளார். குடும்ப உறுப்பினர் ஒருவர் நம்முடன் வாழ்ந்து மறைந்தால் அவருக்கு எப்படி இறுதி அஞ்சலி செலுத்தி அடக்கம் செய்வோமோ அதேபோன்று சடங்குகளை தமது ராசியானன காருக்கு, சஞ்சய் போலரே குடும்பத்துடன் செய்தார்.

பின்னர், பெரிய ஜேசிபி எந்திரம் கொண்டு தோண்டப்பட்ட குழியில் ராசியான கார் இறக்கப்பட்டது. கார் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. சஞ்சய் போலரே, அவரது குடும்பத்தினர் மண் அள்ளி போட, பிரியா விடையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

Readmore: உஷார்!. இப்படி சமைக்கப்பட்ட உணவுகளும் நீரிழிவு நோய் வர காரணம்!. ஆய்வில் அதிர்ச்சி!