எடப்பாடி அருகே பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் இடம் கிடைக்காத விரக்தியில் மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவ படிப்புகளுக்கு 12ஆம் வகுப்பு மதிப்பெண்களின் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்த நிலையில், மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜக, நீட் நுழைவுத் தேர்வை அறிமுகப்படுத்தியது. இதற்கு தொடக்கத்தில் இருந்தே தமிழக அரசியல் கட்சிகளும் மாணவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தில் இதனால் அரியலூரை சேர்ந்த மாணவி அனிதா தொடங்கி பல மாணவ, மாணவிகள் இன்னுயிரை இழந்துள்ளனர்.

மேலும், நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க கோரி சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. எனினும் இதுவரை குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்காத நிலையில், தமிழ்நாடு மாணவர்களுக்கு நீட் தேர்விலிருந்து விலக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வரும் அதே நேரத்தில் தொடர்ந்து நடைபெறும் மாணவர்களின் உயிரிழப்புகளும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், சேலம் மாவட்டம் எடப்பாடியை சேர்ந்தவர் புனிதா. இவர் 2022 – 2023 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தார். இதையடுத்து, நடந்து முடிந்த மருத்துவ கலந்தாய்வில் மதிப்பெண் குறைந்ததால், மருத்துவ படிப்பிற்கு இடம் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதையடுத்து, நேற்று முன் தினம் பாரா மெடிக்கல் மருத்துவ படிப்பிற்கான கலந்தாய்வில் பங்கேற்றுள்ளார். இதிலும் இடம் கிடைக்காததால் மனமுடைந்த மாணவி நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Readmore: குமாரபாளையத்தில் போதைக்கு அடிமையான இளைஞர்!. தனக்குத்தானே ஊசி போட்டுக்கொண்டதால் நேர்ந்த விபரீதம்!.