இசையமைப்பாளர் AR.ரஹ்மான் – சாய்ரா பானு விவாகரத்து அறிவித்ததையடுத்து, இவர்களின் 29 ஆண்டு திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் தனுஷ் விவாகரத்து பெற்றது மட்டுமின்றி, அவரது நண்பர்கள் அடுத்தடுத்து விவாகரத்து பெறுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி தம்பதிகள் விவாகரத்து பெறுவதாக அறிவித்துள்ள நிலையில், தனுஷின் நண்பர்கள் ஏன் இவ்வாறு அடுத்தடுத்து விவாகரத்து பெறுகின்றனர் என்ற கேள்வி எழுந்து வந்தது. இதையடுத்து, ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதியின் விவாகரத்து ரசிகர்களிடம் மேலும் ஏமாற்றத்தை அளித்தது.

இந்தநிலையில், யாரும் எதிர்பாராத இசையுலகின் புயல் AR.ரஹ்மான் – சாய்ரா தம்பதியின் விவாகரத்து செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்திய சினிமாவில் அசைக்க முடியாத இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். திரையுலகில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படம் மூலம் அறிமுகமானார். அதில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் பட்டி, தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. முதல் படத்திலேயே மக்களின் மனதை வென்றார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான்.

தொடர்ந்து அவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது. இதையடுத்து தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்தார். வெஸ்டர்ன் ஸ்டைல் இசையை கொடுக்கும் இவர் கிழக்கு சீமையிலே, கருத்தம்மா போன்ற கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களுக்கும் இவர் அமைத்த இசை மனதை வருடியது. மண்வாசம், சோகம், அண்ணன் தங்கை பாசம், காதல் போன்ற அனைத்தையும் அவரது இசையில் கலந்து கொண்டார் என்றால் அது மிகையாகது. இசை உலகில் தனக்கென தனி முத்திரை பதித்த இவர் இசைப்புயல் என அழைக்கப்படுகிறார். ஆஸ்கார் விருது, கோல்டன் குளோப் விருது, பாஃப்டா விருது, தேசியத் திரைப்பட விருது போன்ற புகழ் பெற்ற விருதுகளைப் பெற்றவர்.

இந்த நிலையில் விவாகரத்து தொடர்பாக சாய்ரா பானுவின் வழக்கறிஞர் வந்தனா ஷா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “பல ஆண்டுகால திருமண வாழ்க்கைக்குப் பிறகு, தன்னுடைய கணவர் ஏ.ஆர். ரஹ்மானிடமிருந்து பிரியும் கடினமான முடிவை சாய்ரா எடுத்துள்ளார். அவர்களுடைய உறவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க உணர்வுரீதியான அழுத்தத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவர் மீது ஒருவர் அவர்கள் ஆழமான அன்பை வைத்திருந்தாலும், பதட்டங்களும் சிரமங்களும் தங்களுக்கு இடையே ஒரு தீர்க்க முடியாத இடைவெளியை உருவாக்கியுள்ளன என்பதை அவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த நேரத்தில் எந்த தரப்பினரும் இந்த விரிசலை சரிசெய்ய இயலாது. வலி மற்றும் வேதனையில் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாக சாய்ரா தெரிவித்துள்ளார். தன்னுடைய வாழ்க்கையில் இந்த கடினமான அத்தியாத்தை கடக்கும் இந்த நேரத்தில், சாய்ரா தன்னுடைய பிரைவசியை மதிக்குமாறு பொதுமக்களிடம் கோருகிறார்” இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த விவாகரத்து குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “திருமண வாழ்வில் முப்பது ஆண்டுகளை எட்டிவிடுவோம் என நம்பினோம். ஆனால், எதிர்பாரத முடிவு வந்துவிட்டது. கடவுளின் சிம்மாசனம்கூட, உடைந்த மனங்களின் கனத்தினால் சில விஷயங்களை சந்திக்கும். உடைந்த துண்டுகள் மீண்டும் சேரவில்லை என்றாலும் நாங்கள் அர்த்தத்தைத் தேடுகிறோம். இந்த உடைந்த சாப்டரை நாங்கள் கடந்து செல்வதற்கு எங்களின் ப்ரைவசிக்கு மரியாதை கொடுக்கும் நண்பர்களின் அன்புக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானு திருமணம் கடந்த 1995-ம் ஆண்டு நடைபெற்றது. இவர்களுக்கு கதீஜா, ரஹீமா மற்றும் அமீன் என்ற 3 குழந்தைகள் உள்ளனர். தமிழ் சினிமாவில் பிரபலமான தம்பதிகளில் ஒன்றாக பார்க்கப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பானுவின் விவாகரத்து முடிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Readmore: ஆன்டிபயாடிக் மருந்தை எடுத்துக் கொள்ளும்போது எச்சரிக்கை..!! கடும் பாதிப்புகள் ஏற்படும்..!! WHO விஞ்ஞானி அதிர்ச்சி தகவல்..!!