தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் நலனுக்காக, சத்துணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் பள்ளிகளில் பயிலும் லட்சக்கணக்கான மாணவர்கள், நாள்தோறும் மதிய உணவு உட்கொண்டு வருகின்றனர். மாணவர்களின் உடல்நலனை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு நாளும் விதவிதமான சத்துணவு வகைகள் தயாரித்து, பரிமாறப்பட்டு வருகிறது. இவற்றில் அவ்வப்போது சிறு மாற்றங்களும் செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, சமீபத்தில் மாணவர்களுக்கான உணவுப்பட்டியலில் மாற்றம் செய்து, சமூக நலத்துறை ஆணையர் லில்லி, உத்தரவிட்டார். அதாவது வழக்கம்போல மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு வகைகளில், 1 மற்றும் 3வது வாரம், 2 மற்றும் 4வது வார செவ்வாய்கிழமைக்கான உணவில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் முதல் மற்றும் 3வது வாரத்தின் செவ்வாய்க்கிழமைகளில் தக்காளி மசாலா முட்டையுடன், கருப்பு கொண்டக்கடலை புலாவ் வழங்கப்பட்டு வந்தது. தற்போது இதற்கு பதிலாக, சாதம் மற்றும் தக்காளி மசாலா முட்டையுடன் கொண்டக்கடலை (கிரேவி) தயார் செய்து வழங்கப்பட வேண்டும்.
இதேபோல், ஒவ்வொரு மாதமும் 2வது மற்றும் 4வது வாரத்தின் செவ்வாய்க்கிழமைகளில் வழங்கப்பட்டு வரும் மிளகு முட்டையுடன் கூடிய மீல் மேக்கர் வெஜிடபிள் சாதத்திற்கு பதிலாக, சாதம் மற்றும் காய்கறியுடன் கூடிய சாம்பார், மிளகு முட்டையுடன் தயாரித்து வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், புதிய உணவுகளை தயாரிப்பது குறித்த வீடியோவும் அனுப்பப்பட்டது. அதன்படி நேற்று முன் தினம் முதல், மாநிலம் முழுவதும் இந்த புதிய உணவு மாற்றம் நடைமுறைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.