கோபிசெட்டிபாளையம் அருகே கடன் பிரச்சனையால் ஏற்பட்ட குடும்பத் தகராறில் 2 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த சிறுவலூர் பகுதியைச் சேர்ந்தவர் தனசேகர். இவரது மனைவி பாலாமணி. இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளனர். இந்தநிலையில், தனசேகர், கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால், கடன் அதிகமாகியுள்ளது. இதுதொடர்பாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலை நேற்றும் இருவருக்குள்ளும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியில் இருந்த தம்பதி, வண்டுகளை அழிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குளிர்பானத்தில் குழந்தைகளுக்கு கலந்துகொடுத்துவிட்டு, இவர்கள் அதை குடித்துள்ளனர்.
சிறிது நேரத்தில் மயக்கமடைந்த நிலையில், அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு பெருந்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி கணவன், மனைவி, குழந்தைகள் என 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கடன் பிரச்சனையால் ஏற்பட்ட தகராறில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.