வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் இன்று (27.11.2024)ஃபெங்கல் புயலாக மாறி உள்ளது. இதன் காரணமாக, இன்று சென்னை உள்பட டெல்டா மாவடங்கள் என பல பகுதிகளில் அதிகனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், புதுச்சேரி, கடலூர், அரியலூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என்றும் மேலும், கடலோர மற்றும் டெல்டா மாவட்டங்களில் கன முதல் மிக அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது. பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தி உள்ளது.
இந்த நிலையில், கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்று நடைபெற இருந்த சென்னை பல்கலைக்கழக தேர்வுகள் கனமழை காரணமாக ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு முழுவதும் இன்று (நவ.27) நடைபெறவிருந்த பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகள், கனமழை காரணமாக ஒத்திவைக்கப் படுவதாக தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இந்தநிலையில், தனியார் வானிலை ஆர்வலர் ஹேமச்சந்திரன் தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது நாகையில் இருந்து 420 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து 530 கிமீ தொலைவிலும் நிலவி வருகிறது. இது அடுத்த 6 மணிநேரத்தில் புயலாக மாறும்.
புயலாக மாறி வடக்கு வடமேற்கு திசையில் இன்று மாலையில் நகர தொடங்கும் இதனால் டெல்டா பகுதியில் மிக கனமழை பெய்யும். இந்த புயல் 36 மணிநேரம் ஒரே இடத்தில் நகராமல் நிற்கும். அப்போது, திருவாரூர், நாகை , மயிலாடுதுறை, காரைக்கால், கடலூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மிக அதி கனமழை பெய்யும் எனவும், அதன் பிறகு படிப்படியாக புயலின் தாக்கம் குறைந்து வடகடலோர மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும்.
நவம்பர் 27, 28ஆம் தேதி மட்டுமின்றி, டிசம்பர் 1ஆம் தேதிவரை நாகை முதல் சென்னை வரையில் உள்ள கடலோர மாவட்டங்களில் மழை பெய்யும். நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் மழை தீவிரமடையும் என்று தெரிவித்துள்ளார்.