தினந்தோறும் வியாபாரம் செய்யும் சிறு வியாபாரிகளுக்கு தமிழக அரசின் தாட்கோ நிறுவனம் கடன் உதவி திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. சிறு வணிக கடன் என்ற திட்டத்தின் மூலம் குறைந்த வட்டியில் கடன்கள் வழங்கப்பட்டு வருகிறது. நபர் ஒருவருக்கு 1 லட்சத்து 25ஆயிரம் ரூபாய் வீதம் சிறு வணிக கடன் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தால் சிறு வணிக வியாபாரிகள் ஸ்பீடு வட்டி, மீட்டர் வட்டி போன்றவற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

அடுத்ததாக சிறு, குறு, நடுத்தர தொழில் நடத்துபவர்கள் தங்கள் நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில் “கலைஞர் கடன் உதவி” திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்பட்டு வருகிறது. சிறு, குறு, உற்பத்தி நிறுவனங்களுக்கு குறைந்த வட்டியான 7 சதவீத விகிதத்தில் கடன் வழங்கப்படுகிறது. மேலும் இத்திட்டத்திற்காக தமிழக அரசு நடப்பு நிதியாண்டில் ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

இதே போல குறைந்த வட்டியில் 20 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடன் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்கள் மூலம் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்சவரம்பினை 15 லட்சம் ரூபாயில் இருந்து 20 இலட்சமாக உயர்த்தி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கம், பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச் சங்க ஊழியர் சங்கங்களாலும், பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்க உறுப்பினர்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை தனி நபர் கடன் வழங்கப்பட்டு வந்தது. இதன் கடன் வழங்கும் நிதியை அதிகரிக்க வேண்டும் என உறுப்பினர்கள் தொடர் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த கோரிக்கையை ஏற்று பணியாளர் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கங்களால் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் தனிநபர் கடன் உச்ச வரம்பினை 15 லட்சம் ரூபாயில் இருந்து 20 லட்சம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதன் படி தனி நபர் கடன் பெறும் உறுப்பினர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தும் தவணைக் காலம் 120 மாதங்களுக்குட்பட்டு இருத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடன் பெறும் உறுப்பினர்களின் வயது வரம்பினையும் கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் அதிகபட்சக் கடன் அளவு ரூ.20 லட்சம் அல்லது உறுப்பினர் பெறும் மொத்த சம்பளத்தில் 25 மடங்கு இதில் எது குறைவோ அத்தொகை கடனாக வழங்கப்பட வேண்டும் என நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் கடன் தொகையில் 5% பங்குத் தொகையாக வசூலிக்கப்பட வேண்டும். மேலும் பணியாளர்களின் மொத்த ஊதியத்திலிருந்து கடன் தவனை தொகை உள்ளிட்ட அனைத்து பிடித்தங்களும் செய்யப்பட்டு அவருடைய மொத்த ஊதியத்தில் 25%-க்குக் குறைவாக இருக்கக் கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Readmore: வெள்ளநீரால் பாதிக்கப்பட்ட செட்டிப்பட்டி!. நலத்திட்ட உதவிகளை வழங்கிய தவெகவினர்!.