குழந்தைகளின் வருங்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு பெற்றோர்களின் எண்ணமாக உள்ளது. அந்த வகையில் பல்வேறு சேமிப்பு திட்டங்களில் முதலீடுகளை செய்து வருகின்றனர். குழந்தைகளுக்காக தங்கம் சேமிப்பது. நிலத்தில் முதலீடு செய்வது, படிப்பிற்காக வங்கியில் பணம் கட்டுவது என பல திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இதே போல எல்ஐசி தொடங்கி போஸ்ட் ஆபிசில் உள்ள பல திட்டங்களுக்கு மாதம், மாதம் ஒரு தொகையை ஒதுக்கி வருகின்றனர், மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு சேமிப்பு திட்டங்களையும் நடைமுறைப்படுத்தி வருகிறது.

அதில் ஒரு சேமிப்பு திட்டம்தான் இந்த செல்வமகள் சேமிப்பு திட்டம் ஆகும். இந்த திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கி வைத்தார். பெண் பிள்ளைகளுக்காக இந்த திட்டம் தொடங்கப்பட்டதாகும், பெண்கள் உயர் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்காக இந்த திட்டம் மிகப்பெரிய அளவில் பயன் அளித்து வருகிறது. இந்த திட்டத்தில் மாதம் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்ய முடியும். 15 ஆண்டுகள் முதலீடு செய்தால் 21 ஆண்டுகள் வட்டியோடு சேர்த்து உங்களுக்கு 11 லட்சம் ரூபாய் வரை ரொக்கமாக பணம் கிடைக்கும்.

இந்தநிலையில், சேலத்தில் குழந்தைகளிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், சிறப்பு முகாம் சேலம் கிழக்கு, மேற்கு கோட்டத்தில் உள்ள தபால் அலுவலகங்களில் நடைபெறுகிறது. இதுகுறித்து, சேலம் கிழக்கு, மேற்கு கோட்ட தபால் அலுவலக கண்காணிப்பாளர் வெளியிட்டுள்ள குறிப்பில், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் பெயரில் செல்வ மகள் சேமிப்பு கணக்கு போன்ற திட்டங்களில் கணக்கு தொடங்கலாம்.

மேலும் இந்த முகாமில் சேமிப்பு கணக்கு, வருங்கால வைப்பு நிதி கணக்கு, தொடர் வைப்பு கணக்கு உள்ளிட்ட திட்டங்களிலும் கணக்கு தொடங்கலாம் என்றும் புதிதாக கணக்கு தொடங்கும் 3 வயதுக்குட்பட்ட முதல் 100 குழந்தைகளுக்கு சான்றிதழ் வழங்கி ஊக்குவிக்கப்படவுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்கள் குழந்தைகளுக்கு புதிதாக சேமிப்பு கணக்குகளை தொடங்கி அவர்களுக்கும் இந்த பழக்கத்தை ஊக்குவிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Readmore: நீர்வரத்து கிடு கிடு உயர்வு!. வினாடிக்கு 31,575 அடியாக அதிகரிப்பு!. மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளளவை எட்டுமா?. விவசாயிகள் எதிர்பார்ப்பு!