அயன் பட பாணியில் நடந்த அதிரவைக்கும் சம்பவம், தங்கும் விடுதிகள் அதிகம் உள்ள சென்னை, திருவல்லிக்கேணி, வெங்கடேசன் தெருவில் சாலையில் நடந்து சென்ற ஒருவரின் மீது Help என்று எழுதப்பட்ட காகிதம் விழுந்துள்ளது. அந்த கடிதத்தில் தான் கடத்தப்பட்டு இருப்பதாகவும் இதனை தனது மனைவிக்கு தெரிவிக்குமாறு எழுதபட்டு அதில் ஓர் அலைபேசி எண் இருந்துள்ளது. அந்த நபரும் அதில் இருந்த எண்ணிற்கு அழைத்து உங்களுடைய கணவர் கடத்தபட்டுள்ளார் என கூறியுள்ளார் அதற்க்கு தனது கணவர் துபாயில் இருப்பதாக கூறி நம்ப மறுத்துள்ளார்.

பின்னர், இது பற்றி திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் தகவல் அளித்துள்ளார். அந்த தகவலின் பேரில் அங்கு சென்று நடத்திய சோதனையில் கிரீன் கேலக்ஸி oyo விடுதியின் நான்காவது மாடியில் கொடூரமாக தாக்கப்பட்டு கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்த ஒருவரை மீட்டனர். மேலும், உடல் முழுவதும் ரத்தக்காயம், வீக்கம், தீக்காயம், முதுகில் தழும்புகள் என கடுமையாக தாக்கப்பட்ட அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இந்நிலையில், அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டம், வருகபாளையம் கிராமத்தைச் சேர்ந்த ஷஷிமோன் என தெரியவந்தது. இந்நிலையில், இவர் துபாயில் எலக்ட்ரீசியன் ஆக இருந்த  வேலை பார்த்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் அவர் வேலை இழந்து உள்ளார். இதனை தொடர்ந்து, வேலை தேடி அலைந்து கொண்டிருக்கும் போது அங்கு பழக்கமான பென்னிக், மாலிக் என்ற நண்பர்கள் தாங்கள் கொடுத்து அனுப்பும் பொருளை நாங்கள் சொல்லும் நபரிடம் கொடுத்தால் தங்களுடைய தொழில் கூட்டாளிகள் நிறைய பணம் தருவார்கள் என்று ஆசை வார்த்தை கூறியுள்ளனர்.

இந்நிலையில், அதை நம்பி 5 லட்சம் ரூபாய்க்காக நான்கு மாதங்களுக்கு முன்பு குருவியாக மாறியுள்ளார்.  2 கோடி ரூபாய் மதிப்புள்ள 3 தங்க கட்டிகளை ஆசனவாய் வழியே உடலில் செலுத்திக்கொண்டு சென்னை வந்துள்ளார். மேலும், அவரை விமான நிலையத்தில் காத்திருந்த நான்கு பேர் அழைத்து சென்று தங்க கட்டிகளை கேட்டுள்ளனர். இதனையடுத்து, அவர் சற்று நேரத்திற்கு முன்பு தன்னை சந்தித்த மற்றொரு  கும்பல் உங்களுடைய பெயரைச்சொல்லி தங்கத்தை வாங்கிக் கொண்டதாக கூறியுள்ளார்.

இதில், ஆத்திரமடைந்த அந்த நபர்கள் அவர்கள் ஷஷிமோனின் கை, கால்களை கட்டி விடுதி கரையில் அடைத்து வைத்து நான்கு மாதங்களாக உணவு கொடுக்காமல் அடித்து உதைத்து சித்திரவதை செய்துள்ளனர். இந்த நிலையில் தான் கழிவறைக்கு செல்வதாக கேட்டு கட்டில் இருந்து விடுபட்டபோது உதவி கேட்டு காகிதத்தில் எழுதி வெளியே வீசியுள்ளார். இதனை தொடர்ந்து, விடுதியின் உரிமையாளர் இம்ரான், ஆசிப் பயஸ், முகமது ஆலிம் ஆப்கான், விடுதி ஊழியர் ஒடிசாவை சேர்ந்த வருந்தரதாஸ், மதுரை கோபிகண்ணன் ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில் இம்ரான் விடுதியை நடத்திக் கொண்டே துபாயில் இருந்து தமிழ் ஆட்கள் மூலம் தங்கத்தை கடத்தி வந்து சென்னையில் சப்ளை செய்வதாக தெரியவந்துள்ளது. மேலும், சென்னையிலிருந்து ஒருவரை அனுப்பி தங்கத்தை கடத்தி வருவது சாத்தியம் இல்லை என்பதால் துபாயில் வேலை பார்த்து இப்போது வேலைக்காக ஏங்கும் தமிழர்களை குறிவைத்து அவர்களை பயன்படுத்துகின்றனர்.

மேலும்,  இம்ரான் எந்தெந்த தங்க வியாபாரிகளுக்கு இம்ரான் கடத்தல் புரோக்கராக இருக்கிறார். எத்தனை முறை தங்கம் கடத்தி உள்ளார். ஷஷிமோன் கடத்தி வந்த தங்கம் உண்மையில் என்ன ஆனது என்பது குறித்து  திருவல்லிக்கேணி காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Read More : ரிசர்வ் வங்கி பெயரில் மோசடி..! பொதுமக்களே உஷார்..!!