எடப்பாடி அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணை பக்கத்துவீட்டுக்காரர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த கொங்கணாபுரம் பகுதியில் அமைந்துள்ளது குரும்பப்பட்டி ஊராட்சி. இங்கு காளிகவுண்டன் வளவு பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 50). இவர், ஆட்டு வியாபாரம் செய்து வரும் நிலையில், இவருக்கு சின்னப்பொண்ணு (46) என்ற மனைவியும், 29 வயதில் விக்னேஷ் என்ற மகனும், 25 வயதில் ஜமுனா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று, மாதையன் ஆடு வாங்குவதற்காக சந்தைக்கு சென்றுள்ளார். இதனால், வீட்டில் சின்னப்பொண்ணு, அவரது 7 வயது பேத்தி மற்றும் மாதையனின் அண்ணன் வெங்கடாசலம் ஆகியோர் மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.

அன்றைய தினம் இரவு 3 பேருமே சாப்பிட்டுவிட்டு தூங்கச் சென்றுள்ளனர். முற்றத்தில் கயிற்று கட்டிலில் வெங்கடாசலம் தூங்கினார். வீட்டிற்குள் பேத்தியுடன் சின்னப்பொண்ணு தூங்கிக் கொண்டிருந்தார். மறுநாள் காலையில், சந்தைக்கு சென்றிருந்த மாதையன் வீடு திரும்பியுள்ளார். அப்போது, சின்னப்பொண்ணு சடலமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மேலும், அவரது ஆடைகள் கிழிந்திருந்தன. உடம்பெல்லாம் நகக்கீறல்கள், காயங்கள் கிடந்தன. சிறுமி கட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தாள். ஆனால், அண்ணன் வெங்கடாசலத்தை காணவில்லை.

பின்னர், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த கொங்கணாபுரம் போலீசார், சின்னப்பொண்ணுவின் சடலத்தை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில், சின்னப்பொண்ணு பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்தது. குடும்பத்தினருக்கு நன்றாக அறிமுகமானவர்தான், இப்படியொரு காரியத்தை செய்திருக்க முடியும் என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வந்தனர். அப்போதுதான், 43 வயது காவேரி என்ற நபர் மீது போலீசாருக்கு சந்தேகம் திரும்பியது.

பக்கத்து வீட்டுக்காரரான காவேரி, ஆட்டு வியாபாரம் செய்து வருகிறார். இவரை பிடித்து விசாரித்தபோது பல அதிர்ச்சி தகவல்கள் வெளிவந்தன. சின்னப்பொண்ணு மீது பல காலமாகவே காவேரிக்கு ஒரு கண் இருந்து வந்துள்ளது. இதனால் வீட்டில் யாரும் இல்லாத சமயங்களில், சின்னபொண்ணுவுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். அதற்கு உடன்படாத சின்னபொண்ணு, காவேரியை கடுமையாக கண்டித்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று வீட்டில் அனைவரும் வெளியூர் சென்றிருப்பதை அறிந்த காவேரி, தன்னுடைய மனைவி, குழந்தைகளை கோயிலுக்கு அனுப்பி வைத்துவிடடு, அதிகாலை நேரத்தில் சின்னப்பொண்ணுவின் வீட்டிற்கு சென்றுள்ளார்.

வீட்டின் முன்பு தூங்கிக் கொண்டிருந்த மாதையனின் அண்ணன் வெங்கடாசலத்தை எழுப்பி, வெளியே அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்து போதையாக்கியுள்ளார். இதனால், அவர் அங்கேயே போதையில் விழுந்துவிட்டார். பிறகு காவேரி மட்டும், வீட்டுக்கு வந்து சின்னப்பொண்ணுவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவேரி, மீண்டும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த காவேரி, சின்னப்பொண்ணுவின் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். இவ்வளவும் விசாரணையில் உறுதியானதை அடுத்து, காவேரியை போலீசார் கைது செய்தனர்.