சேலம் பேருந்து நிலையத்தில் கார் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணவேலனை செருப்பால் அடித்த பெண் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

தீபாவளி பண்டிகைக்கான விடுமுறை முடிந்து பணியிடங்களுக்கு திரும்பிய பயணிகளால் ஞாயிற்றுக் கிழமை இரவு சேலம் மத்திய பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது. இதனால், கூட்டத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணவேலன் தலைமையில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இரவு 9 மணிளவில் சூரமங்கலம், ஆண்டிப்பட்டி பகுதியை சேர்ந்த கார்த்திக்கு, அவரது சகோதரி கமலேஸ்வரி மற்றும் உறவினர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகள் வரும் வாயில் வழியாக தங்களது ஸ்கார்பியோ காரை நிறுத்த முயன்றனர்.

அப்போது, அங்கு பணியில் இருந்த போலீசார் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் காரை அப்புறப்படுத்த உத்தரவிட்டனர். அப்போது கார்த்திக் அந்த காரை ஆய்வாளர் மீது மோதும்படி காரை இயக்கியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக பேசிக்கொண்டிருந்தபோது வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, காரில் அமர்ந்திருந்த கமலேஸ்வரி தனது காலில் அணிந்திருந்த செருப்பைக் கொண்டு சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணவேலனை சரமாரியாக அடித்ததாகவும், அதனை தடுக்க சென்ற போலீசாரையும் கமலேஸ்வரி அடித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து திடீரென கமலேஸ்வரி சாலையில் உருண்டு பிரண்டு ரகளை செய்துள்ளார். பின்னர் காரில் வந்த மூன்று பேரையும் போலீசார் குண்டு கட்டாக காவல்துறையினரின் வாகனத்தில் ஏற்றினர். இதையடுத்து, சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சரவணவேலன் அளித்த புகாரின் அடிப்படையில் பள்ளப்பட்டி போலீசார் மூன்று பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களின் காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட மூன்று பேர் மீது அரசியல் அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், ஆபாச வார்த்தைகள் திட்டுதல் உட்பட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Readmore: சூரசம்ஹாரம் நடைபெறாத முருகர் கோயில்!. அறுபடை வீடுகளில் திருத்தணியின் சிறப்பம்சங்கள் இதோ!