சேலத்தில் சொத்து தகராறில் இரண்டு குழந்தைகளை உறவினரே வெட்டிக்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் பனமரத்துப்பட்டி ஒருவங்காடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி ராஜா. இவரது உறவினர் தனசேகர். இவர்களது தந்தையர்கள் இருவரும் அண்ணன் தம்பிகள். அதனால், இரு குடும்பத்தினரிடையே அடிக்கடி சொத்து தகராறு இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக தனசேகர் ராஜாவின் குழந்தைகளை வெட்டிக் கொலை செய்துள்ளார்.
ராஜாவின் குழந்தைகளான, நவீனா 12-ஆம் வகுப்பும், குகன் 10ஆம் வகுப்பும் படித்து வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்ததும் வீட்டுக்கு சென்ற இருவரும், அருகில் பூக்களை பறித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த தனசேகர் இருவரையும் சரமாரியாக அரிவாளால் கழுத்தில் வெட்டியுள்ளார். இதனால் நிலைகுலைந்த குழந்தைகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்.
குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த ராஜாவையும் தனசேகர் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் ராஜாவின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், தப்பியோடிய தனசேகரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.