ஈரோடு கோபிசெட்டிப்பாளையம் அருகே மகன்கள் கண்முன்னே தந்தை துப்பாக்கிச்சூட்டில் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள செங்கோட்டையன் காலனியைச் சேர்ந்தவர் கண்ணன்(56). கூலி வேலை செய்து வரும் இவருக்கு விஜய் (26), மூர்த்தி ஆகிய இரு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களாக கண்ணன் தனக்கு தானே பேசிக் கொண்டு, மனநிலை பாதிக்கப்பட்டவராக இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மகன்கள் இருவரும் கண்ணனை கோபியில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றுள்ளனர்.

அப்போது, நாகர்பாளையம் சாலையில் வண்டியில் பெட்ரோல் தீர்ந்ததால்,
தந்தை கண்ணனையும், அண்ணன் மூர்த்தியையும் அங்கேயே இறக்கி விட்டு விட்டு பெட்ரோல் வாங்கிவிட்டு திரும்பியுள்ளார் விஜய். ஆனால், அங்கு தந்தை கண்ணனும், மூர்த்தியும் இல்லாததால், அண்ணனுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு எங்கே இருக்கிறாய் என கேட்டுள்ளார். அதற்கு தந்தை கண்ணன் இருட்டில் அருகில் உள்ள தோட்டத்திற்குள் ஓடியதாகவும், தேடி பார்த்த போது கிடைக்கவில்லை என அண்ணன் கூறியதை அடுத்து, தந்தையை இருவரும் சேர்ந்து தேடி உள்ளனர்.

இந்தநிலையில் தோட்டத்திற்குள் புகுந்த கண்ணனை திருட வந்ததாக கூறி ஒருவர் துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. அருகில் சென்று பார்த்தபோது, பெரிய அரிவாளுடன் கண்ணன் உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த மகன்கள் போலீசாருக்கு தகவலளித்தனர். இதுதொடர்பான விசாரணையில், துப்பாக்கியால் சுட்டவர் கீரிப்பள்ளம் தோட்டத்தைச் சேர்ந்த மோகன்லால் என தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த கண்ணனின் உறவினர்கள், மொடச்சூர் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசாரின் சமரச பேச்சுவார்த்தையையடுத்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Readmore: தாய்மார்களே கவனம்!. உங்க குழந்தைக்கு 2 வயது வரை இந்த உணவுகளை கொடுக்காதீங்க!.