ஈரோட்டில் தலித் இனத்தை சேர்ந்த பெண்ணை வீட்டில் அடைத்து வைத்து 4 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் மைக்கேல்பாளையம் அருகே உள்ள ஓடைமேடு பகுதியைச் சேர்ந்தவர் பட்டியலின பெண். தோட்டங்களில் கூலி வேலை செய்து வரும் இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகளும் உள்ளனர். வேலைக்குச் செல்லும் போது இந்தப் பெண்ணிற்கு மூலகல் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவருடன் பணி சம்பந்தமாக பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. அந்த நபர் கொடுக்கும் தகவல்களின் மூலம் தோட்டங்களுக்கு வேலைக்கு சென்று வந்திருக்கிறார்.
இந்நிலையில் கடந்த 2ம் தேதி இரவு தன்னை சந்திக்க வருமாறு அந்த நபர் அழைத்ததைத் தொடர்ந்து அந்தப் பெண், ஈரோடு அருகே உள்ள தோட்டத்து வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த நபரின் நண்பர்கள் 3 பேரும் அந்த வீட்டிற்கு வந்திருக்கின்றனர். மேலும் இவர்கள் 4 பேரும் சேர்ந்து 2 நாட்களாக அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததோடு, அவரது ஜாதிப் பெயரைச் சொல்லி கடுமையாக பேசியதாக கூறப்படுகிறது. மேலும் அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் குழந்தைகளை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டி இருக்கின்றனர்.
அதிர்ஷ்டவசமாக அங்கிருந்து தப்பிய பெண் தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து கணவரிடம் கூறியுள்ளார். இதையடுத்து அவரது கணவர் ஈரோடு எஸ்பி அலுவலகத்தில் புகாரளித்ததையடுத்து, விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.