பண்டிகை நாட்கள் என்றாலே நமது அனைவரின் நினைவுக்கு வருவது புத்தாடைகள் மட்டுமே. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளுக்கு கண்டிப்பாக அனைவரும் புத்தாடைகளை எடுத்து மகிழ்வார்கள். முன்பெல்லாம் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் ஒரு மாதத்திற்கு முன்பே வார இறுதி நாட்களில் மக்கள் கடைகளுக்குச் சென்று புத்தாடைகளை வாங்கி வருவார்கள். மேலும் அதனை டெய்லர் கடைகளில் கொடுத்து தைத்து அதனை உடுத்துவார்கள்.

இந்த சூழ்நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி ரெடிமேட் ஆடைகள் வர ஆரம்பித்தன. அதனையும் சில நேரங்களில் டெய்லர் கடைகளில் கொடுத்து சற்றே அளவு சரிசெய்து உடுத்தி வந்தனர். கடந்த 5 வருடங்களுக்கு முன்பு வரை நிலைமை இப்படி இருந்தது. தற்போது செல்போன்களின் அசுர வளர்ச்சியால் ஆன்லைன் வர்த்தகமும் பன்மடங்கு அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் தீபாவளி விற்பனை சூடுபிடித்துள்ளது.

அந்தவகையில், ஈரோட்டில் ஜவுளிக்கடை உரிமையாளர் ஒருவர், முதலில் வரும் 1,500 நபர்களுக்கு ₹1க்கு சட்டை என விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரத்தை தெரிந்துகொண்ட இளைஞர்கள் காலை முதலே அந்த கடைக்கு வர தொடங்கினர். நேரம் ஆக ஆக கூட்டம் அதிகரித்தது. ஆனால் கடை உரிமையாளர் கடையை திறக்கவில்லை, செல்போனையும் சுவிட்ச் ஆஃப் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த இளைஞர்களை, அங்குவந்த போலீசார் கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினர். மேலும், முன் அனுமதி பெறாமல் சலுகைகள் அறிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Readmore: உஷார்!. கேக்குகளில் புற்றுநோயை உண்டாக்கும் கெமிக்கல்!. ரெட் வெல்வெட், பிளாக் பாரஸ்ட்டால் ஆபத்து அதிகம்..!!