எடப்பாடி அருகே இருப்பாளியில் சிறப்பு வகுப்பு நடத்துவதாக வரவழைத்து மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட தமிழ் ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே இருப்பாளியில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு தமிழ் ஆசிரியராக, பிரகதீஸ்வரன் என்பவர் தற்காலிகமாக பணிபுரிந்து வருகிறது. இந்தநிலையில், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுவதாக கூறி வரவழைத்துள்ளார். அப்போது, மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடுவதை ஆசிரியர் வாடிக்கையாக இருந்துவந்ததாக கூறப்படுகிறது. அதேபோல், விடுமுறையில் சிறப்பு வகுப்பு வைத்து மதுபோதையில் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகளில் சிலர், இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறியுள்ளனர்.
இதையடுத்து அங்கு சென்ற பெற்றோர்கள், பூலாம்பட்டி காவல்நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். இதனை அறிந்த பிரகதீஸ்வரன் தப்பி செல்ல முயன்றபோது, போலீசார் அவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.