கோவை விளாங்குறிச்சியில் ரூ.158.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை உணர்ந்து, விரைவான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த வணிகச் சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. இதன்மூலமாக பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழ்நாடு விருப்பத் தேர்வாக உருவாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் தமிழ்நாட்டில் தழைத்து வளர, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (ELCOSEZ) உருவாக்குதல், கிராமம் மற்றும் நகர மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை நிரப்புதல், தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்ப மின் ஆளுமையில் சிறந்த மாநிலமாக மாற்றுதல், தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியை அதிகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
கோவை விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டிடம் ரூ.158.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இடம் அளிக்கக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த கட்டிட மேலாண்மை அமைப்பைக் (IBMS) கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இப்புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டிடத்தின் அடித்தளங்களில் வாகனங்கள் நிறுத்துமிடமும், தரை மற்றும் ஐந்து மேல்தளங்களில் தகவல் தொழில்நுட்ப அலுவலகத்திற்கான இடவசதியும் செய்யப்பட்டுள்ளது.
மேலும், 8 மின்தூக்கிகள், தீயணைப்பு வசதிகள். தொலைத்தொடர்பு வசதிகள். மழை நீர் சேகரிப்பு வசதிகள். 72 மணி நேரம் ஜெனரேட்டர் இயக்கத்திற்காக 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் சேகரிப்பு கட்டமைப்பு உள்ளிட்ட வசதிகளுடன் இக்கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நேற்று நடந்த விழாவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதிய கட்டிடத்தை திறந்து வைத்து பல்வேறு நிறுவனங்களுக்கு இட ஒதுக்கீடு ஆணைகளை வழங்கினார். இந்தப் புதிய கட்டிடத்தின் மூலம் 3,500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
Readmore: சேலத்தில் அதிர்ச்சி!. போலீஸையே செருப்பால் அடித்த பெண்!. குண்டுக்கட்டாக தூக்கி கைது செய்து நடவடிக்கை!