பொதுக்கூட்டத்தில் அமர்வதற்காக ஆடம்பரமான பிரத்யேக நாற்காலி வாங்க சொத்தை விற்று ஐந்து லட்சம் தர வேண்டும் என்று சீமான் கட்டாயப்படுத்தியதாகவும், இதனால், கட்சியில் இருந்து விலகுவதாக நாம் தமிழர் கட்சி நிர்வாகி அறிவித்துள்ளார்.
சீமான் நாம் தமிழர் கட்சியில் சர்வாதிகாரம் செய்வதாக நிர்வாகிகள் பலர், ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு விலகி வருகின்றனர். குறிப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பாளர் முன் அக்கட்சி நிர்வாகிகள் எனத் தொடங்கி மேற்கொண்டு விழுப்புரம் வடக்கு மற்றும் மேற்கு மாவட்ட செயலாளர் என அனைவரும் கட்சியை விட்டு விலகியுள்ளனர்.
அண்மையில் நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தருமபுரி மக்களவைத் தொகுதியில் நாதக சார்பில் வேட்பாளராகப் போட்டியிட்டவர் அபிநயா. 65,381 வாக்குகள் பெற்று நான்காவது இடம் பிடித்திருந்தார். சில நாட்களிலேயே மீண்டும் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளராக களமிறக்கப்பட்டார் அபிநயா பொன்னிவளவன். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 10,602 வாக்குகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தார்.
இந்நிலையில், அபிநயா பொன்னிவளவன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “நாம் தமிழர் கட்சியின் அடிப்படை உறுப்பினராக இருந்த நான், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகுகிறேன்” எனப் பதிவிட்டார். இதைப் பார்த்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கட்சி விலகல் கடிதம் என தலைப்பிட்டு அவர் பகிர்ந்திருந்த பதிவில், “நான் கடந்த 4 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சியில் பயணிக்கிறேன். படிக்காத நான் மேடை பேச்சாளராக எண்ணி முதன்முதலாக விழுப்புரம் பொதுக்கூட்டத்தில் பேச முயற்சி செய்தேன் முடியவில்லை. பெண்களுக்கு 50% இடம் என்ற கட்சியில்.. துணிவுள்ள, கொள்கைப் பிடிப்புள்ள எனக்கு வேட்பாளராக வாய்ப்பு தரப்படவில்லை.
தொகுதி பொறுப்பில் உள்ள என் கணவரிடம் சீமான் அவர்கள் “நான் பொதுக்கூட்டத்தில் அமர்வதற்காக ஆடம்பரமான பிரத்தியேக நாற்காலி வாங்க சொத்தை விற்று 5 லட்சம் தர வேண்டும்” என்று கட்டாயப்படுத்தியதால் மிகுந்த மன உளைச்சல் அடைந்தேன். இதனால் நான் கட்சியிலிருந்து விலகுகிறேன். இதுவரை என்னுடன் பயணித்த உறவுகளுக்கு நன்றி இப்படிக்கு நான்..” எனக் குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், அபிநயா இந்தப் பதிவை, சீமான் மீது குற்றம்சாட்டி கட்சியை விட்டு விலகி வரும் நிர்வாகிகளை கிண்டலாக விமர்சிக்கும் வகையில் பதிவிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும், பலரும், அபிநயா வெளியிட்ட பதிவை சீரியஸ் எனக் கருதி, 2 தேர்தல்களில் அடுத்தடுத்து வாய்ப்பு கொடுத்த சீமான் மீது நீங்களே குற்றம்சாட்டலாமா என்ற பல்வேறு கருத்துகளை வெளியிட்டு வந்தனர்.
இந்நிலையில், மீண்டும் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அபிநயா, “சில அவதூறுகளின் அவதூறுகளை அருவருப்பாக்கும் செய்திகள், தான் வீழ்ந்தாலும் தன் இனம் வாழ வேண்டும் என்ற தத்துவத்தை ஏற்ற தலைவன் வழி நடக்கும் எங்களை ஒன்றும் செய்யாது.! பேரன்பும் பெருங் கோபமும் கொண்ட என்னுயிர் அண்ணன் சீமான் வாழும் சம காலத்தில் நான் வாழ்வதையே பெருமையாக கருதுகிறேன்!! என் உயிர் மூச்சு உள்ளவரை அண்ணனின் விரல் பிடித்து அரசியலில் பயணிப்பேன்..!!” என்று தெரிவித்துள்ளார்.
Readmore: தலைவாசல் அருகே கிணற்றில் தவறி விழுந்த பெண்!. ஆட்டுக்குட்டியை காப்பாற்ற சென்றபோது நிகழ்ந்த சோகம்!.