நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் முன்னுக்கு பின் முரணான பேச்சுகளால், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்களாகிய நாங்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து வெளியேறுகிறோம். இன்னும் பலர் வெளியேறுவார்கள் என்று நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.
கடந்த சில நாட்களாக சீமானின் நடவடிக்கையால் அதிருப்தியில் இருக்கும் நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். கடந்த வாரம் சேலத்தில் மாவட்ட செயலாளர் அடுத்தடுத்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகினர். இந்தநிலையில், தற்போது நாமக்கல்லில் 50க்கும் மேற்பட்டவர்கள் கட்சியில் இருந்து விலகியுள்ளனர். இதுகுறித்து, நாமக்கல் மாவட்ட முன்னாள் செயலாளர் வினேத்குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கடந்த 2009ம் ஆண்டு முதல் நாம் தமிழர் கட்சியில் இணைந்து செயல்பட்டு வந்தோம் நாமக்கல் மாவட்டம் மாவட்ட செயலாளராக பதவி வகித்து வந்தேன். மாவட்டத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்கள், பொதுக்கூட்டங்கள் அனைத்துக்கும் செலவு செய்து நடத்தி வந்தோம். இந்நிலையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமானின் முன்னுக்கு பின் முரணான பேச்சுகளால், நாமக்கல் மாவட்ட பொறுப்பாளர்களாகிய நாங்கள் 50க்கும் மேற்பட்டோர் கட்சியில் இருந்து வெளியேறுகிறோம்.
நாமக்கல் மாவட்டத்தில் இன்னும் பல பேர் கட்சியில் இருந்து விலங்குவார்கள். சீமானின் செயல்பாடுகள் கொள்கை ரீதியாக இல்லாமல் இருக்கிறது. நாம் தமிழர் கட்சியில் இருந்து யாரை தொடர்பு கொள்வது என்பதே தெரியவில்லை. நாங்கள் எந்த கட்சியில் இணைவது என்பது குறித்து இன்னும் முடிவு செய்யவில்லை. நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகள் வெற்றியை நோக்கிய பயணமாக இல்லை. ஆளுங்கட்சி அழுத்தம் எதுவும் எங்களுக்கு இல்லை. கட்சியில் இருந்து விலகியவர்கள் ஒருவரையும் சீமான் தொடர்பு கொள்ளவில்லை.
கடந்த இரண்டு வருடங்களாக கட்சித் தலைமைக்கு எங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தோம். ஆனால், நான் எடுப்பது தான் முடிவு. இருந்தால் இருங்கள் இல்லாவிட்டால் போங்கள் என்கிறார். அதனால் நாங்கள் வெளியேறுகிறோம். தமிழகம் முழுவதும் கட்சி நிர்வாகிகள் அதிருப்தியில் இருக்கின்றனர். அதனால் அடுத்தடுத்து வெளியேறுகின்றனர் என்றார்.