நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகுவோர் எல்லோரும் ஸ்லீப்பர் செல்கள்; வேறு கட்சியில் சேர்ந்து எங்களுக்கு உளவு பார்ப்பதற்காக நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம் என்று சீமான் கூறியுள்ளார்.

நடிகர் ரஜினியை அவரது போயஸ் கார்டன் வீட்டில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்து பேசினார். இது தொடர்பாக, சீமான் அளித்த பேட்டி: ரஜினியை நீண்ட நாட்களாக சந்திக்க வேண்டும் என்று இருந்தேன். அன்பான மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு. அரசியல் என்பது ஆபத்தான விளையாட்டு. இது ரஜினியின் மனநிலைக்கு சரிவராது. அரசியலில் அவதூறுகள் எல்லாவற்றையும் தாங்க வேண்டும். களத்தில் நேர்மையாக இருப்பது நிறைய கஷ்டம். நேர்மையாக வாழ்வது உள்ளங்கையில் நெருப்பு துண்டை வைத்திருப்பதுக்கு சமமானது. நடிகர் ரஜினியுடன் நிறைய பேசினேன்; அனைத்தையும் பகிர முடியாது.

ரஜினியுடன் திரையுலகம், அரசியல் என பல விஷயங்களை பேசினேன். நல்ல தலைமை என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். தமிழக அரசியலில் நல்ல தலைமைக்கான வெற்றிடம் உள்ளது. தற்போதுள்ள தலைவர்கள் உருவானவர்கள் அல்ல; உருவாக்கப் பட்டவர்கள். உருவாக்கப்பட்ட தலைவர்களுக்கு அடித்தட்டு மக்களின் கவலை, பசி, கண்ணீர் எதுவும் தெரியாது. மக்களின் கஷ்டங்களை உணர்ந்த தலைவர்கள் காமராஜர், அண்ணாதுரை போன்றவர்கள் தற்போதைய அரசியல் களத்தில் இல்லை. இன்று வாக்குகள் வாங்கப்படுகிறது. சிறப்பாக ஆட்சி நடத்துவதாக ஆட்சியாளர்களே சொல்லி கொண்டு இருக்கிறார்கள்.

செங்கல்பட்டு, மதுராந்தகத்தில், கட்சியிலிருந்து பல தொண்டர்கள் ஏன் விலகுகிறார்கள் என்ற கேள்விக்கு, பதிலளித்த சீமான், நாங்கள் தான் அனுப்பி வைக்கிறோம். நாங்கள் தான் மரியாதையாக போய், எல்லாரையும் அனுப்பி வைக்கிறோம். வெவ்வேறு இயக்கங்களில் போய் சேர்ந்து, எங்களுக்காக உளவு பார்க்க அனுப்பி வைக்கிறோம். எங்களுடைய ஸ்லீப்பர் செல்களாக அனுப்பி வைக்கிறோம் என்று சீமான் கூறினார்.

Readmore: நோட்!. தேர்வே கிடையாது!. 760 காலி பணியிடங்கள்!. தமிழக அரசு வேலைவாய்ப்பு!. உடனடியாக விண்ணப்பியுங்கள்!.