சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் ஒரு தொகுதியில் மட்டும், கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. சேலம் மாவட்டத்தில் திமுக எம்.எல்.ஏ-வாக இருப்பவர் பனைமரத்துப்பட்டி ராஜேந்திரன் மட்டுமே. எனவே, அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. திமுக ஆட்சி அமைந்தபோதே அவருக்கு அமைச்சர் பதவி கட்டாயம் வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகி வந்தது. ஆனால், அப்போது அவருக்கு வழங்கப்படவில்லை.
அதற்கு காரணம், சேலம் மாவட்டத்தில் ஒரு சட்டமன்ற தொகுதியில் மட்டுமே திமுக வெற்றி பெற்றது தான். இதையடுத்து தான், சேலம் மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டார். உள்ளாட்சித் தேர்தலில் சேலத்தில் பெரும்பான்மையான இடங்களில் திமுக வெற்றி பெற்றது. சமீபத்தில், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் கூட திமுக வேட்பாளர் டி.எம்.செல்வகணபதி அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதற்கு பெரிதும் காரணமாக இருந்தவர் ராஜேந்திரன் என்று கூறப்பட்டது.
எம்எல்ஏ ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என சேலம் மாவட்ட திமுகவினர் தற்போது வெளிப்படையாகவே பேசத் தொடங்கியுள்ளனர். அண்மையில், ஓமலூர் அருகே நடைபெற்ற கூட்டத்தில் திமுக நிர்வாகி ஒருவர் பேசுகையில், சேலம் மாவட்டத்திற்கு அமைச்சர் பதவி வேண்டும் என கோரிக்கை விடுத்தார். பொறுப்பு அமைச்சராக உள்ள அமைச்சர் கே.என்.நேரு, பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருகிறார். அப்போது நம்மால் அவரிடம் பேச முடிவதில்லை. அமைச்சர் இல்லை என்றால் சேலத்தில் வெற்றி பெற முடியாது. தாயிடம் தாய்ப்பால் குடித்தால் தான் வயிறு நிரம்பும். அடுத்த தாயிடம் குடித்தால் நிரம்புமா? என அவர் பேசியிருந்தார். சேலம் திமுகவினரின் குரல் தலைமைக்குச் சென்றிருக்கும் நிலையில், வரவிருக்கும் அமைச்சரவை மாற்றத்தில் ராஜேந்திரனுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக, முதல்வர் ஸ்டாலினின் அமெரிக்கா பயணத்திற்கு முன்பே தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என பேச்சுகள் தீவிரமாக அடிபட்டு வந்தன. ஆனால், அமைச்சரவை மாற்றம் இல்லை என முதல்வரே தெரிவித்துவிட்டார். ஆனாலும், அமெரிக்காவுக்கு கிளம்பும்போது, “வெய்ட் அண்ட் சீ” என கூறிச்சென்றதால், ஸ்டாலின் திரும்பி வந்ததுமே அமைச்சரவையில் மாற்றம் நடக்கும் என விவாதிக்கப்பட்டு வருகிறது.