சேலத்தில் சதுரங்க வேட்டை பட பாணியில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு நாட்களில் ₹2 லட்சம் கிடைக்கும் விளம்பரம் செய்து மக்களை ஏமாற்றி பணம், நகை மோசடி செய்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலத்தில் திருமணம் மண்டபம் ஒன்றை வாடகை எடுத்து, மனிதநேய அறக்கட்டளை என்ற பெயரில் ₹10க்கு வழங்கப்பட்ட உணவு வழங்கியுள்ளனர். இதனை தொடர்ந்து மக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. அப்போது அங்கு வந்த மக்களிடம் இரட்டிப்பு ஆசையை தூண்டி உங்கள் கைகளில் உள்ள பணத்தை எங்களிடம் முதலீடு செய்தால் 7 மாதங்களில் இரட்டிப்பாக திரும்ப கிடைக்கும் என விளம்பரம் செய்துள்ளனர். இதை உண்மை என்று நம்பிய பலர், சுமார் ₹50,000 முதல் ₹5 லட்சம் வரை பணத்தை போட்டி போட்டுக்கொண்டு முதலீடு செய்திருக்கிறார்கள்.
ஆசை யாரைதான் விட்டுவைக்கும், இதில் நல்ல லாபம் கண்ட அந்த கும்பல், நேற்று, ₹1 லட்சம் முதலீடு செய்தால் இரண்டு நாட்களில் ₹2 லட்சம் கிடைக்கும் என மீண்டும் ஒரு விளம்பரம் செய்திருக்கிறது. இந்த உண்மை என்று நம்பி மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் சந்தேகமடைந்த போலீசார், அங்கு சென்று விசாரித்துள்ளனர். அப்போதுதான் அவர்களது மோசடி அம்பலமானது. சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் உள்ளே சென்று விசாரணை நடத்தியதில் எந்த ரசீதும் கொடுக்காமல் ₹100 கோடி வரை வசூலித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த அறக்கட்டளையை நடத்தும் விஜயா பானு மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் இருப்பதும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து விஜயா பானு, ஜெயப்பிரதா மற்றும் பாஸ்கர் ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.12 கோடி பணம், 2.5 கிலோ தங்கம், 13 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. எத்தனை சதுரங்க வேட்டை படம் வந்தாலும், ஆசையை தூண்டி மக்களை ஏமாற்ற முடியும் என்பது இந்த சம்பவம் மீண்டும் ஒருமுறை நினைவுப் படுத்துகிறது.