சேலம் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலி அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
தமிழகத்தில் தனிநபர் விவசாயிகளுக்கு விவசாய உற்பத்தியை பாதிக்காத வண்ணமும், விளைபொருட்களின் மூலமாக கிடைக்கும் வருவாயை பெருக்கிடும் நோக்கத்துடனும் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலி அமைக்க அரசு சார்பில் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில், சேலம் மாவட்டத்தில் விவசாய நிலங்களில் சூரிய சக்தியால் இயங்கும் சூரிய ஒளி மின்வேலி அமைக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி வெளியிட்ட செய்தி குறிப்பில்,விவசாயிகள் தங்கள் விளைநிலங்களிலுள்ள பயிர்களை சேதப்படுத்தும் ஆடு, மாடு, காட்டுப்பன்றி, காட்டெருமை, மான் மற்றும் யானை போன்ற விலங்குகளிடமிருந்து தங்களது பயிர்களை பாதுகாக்கவும், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான மோதலை தவிர்க்கவும் வழிவகை செய்திட வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் சூரியசக்தி மின்வேலி அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
சூரியசக்தி மின்வேலியானது உயர் மின்னழுத்தம் மற்றும் குறுகிய கால மின்சார அதிர்ச்சிகளைக் கொண்டு செயல்படுவதால் விலங்குகளுக்கு உயிர் ஆபத்தினை ஏற்படுத்தாது. இதற்கு 50% மானியம் வழங்கப்படுகிறது. இது பேட்டரி அமைப்புடனும், தொங்கும் சூரியசக்தி மின்வேலி அமைப்புடனும் 10 வருட உத்தரவாதம் உடையதாக இருக்கிறது. குறிப்பாக விலங்குகள் மின்வேலியில் சிக்கினால் கைபேசி மூலம் அறிந்து கொள்ளலாம்.
ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 2 ஹெக்டர் பரப்பிற்கு, 566 மீட்டர் வரை மானியம் வழங்கப்படும். தனிப்பட்ட விவசாயிகளுக்கு 50% மானியமாக வழங்கப்படும். இந்த திட்டத்தில் சிறு, குறு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பிரிவினைச் சார்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. வேலிகள் அமைக்கப்படும் விளை நிலங்களின் எல்லைப் பகுதிகளில் உள்ள முட்புதர்கள் மற்றும் தாவரங்கள் சுத்தம் செய்து தருவது விவசாயிகளின் பொறுப்பாகும்.
வேலிகள் அமைக்கப்படும் வயலின் ஒழுங்கற்ற எல்லைகளுக்கும், வளைந்து நெளிந்து அமைக்கும் சூரிய மின்வேலிக்கு தேவைப்படும் கூடுதல் குழாய்களுக்குமான (Corner Post) செலவினை விவசாயிகளே தங்களின் பங்களிப்பாக செலுத்த வேண்டும். வனப்பகுதியை ஒட்டியுள்ள வயல்களில் சூரிய மின்வேலி அமைக்க வனத்துறையிடமிருந்து தடையில்லா சான்று பெறப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படும்.
அதேபோன்று, இத்திட்டம் தொடர்பாக முழு விவரங்களைப் பெற்று பயனடைய வேளாண்மைப் பொறியியல் துறையின் அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். வேளாண்மைப் பொறியியல் துறையின் சேலம் 7 குமாரசாமிப்பட்டி செயற்பொறியாளர் அவர்களை 04287 2906266 என்ற எண்ணிலும், உதவி செயற்பொறியாளரை 04287 2905277 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேலும் வேளாண்மைப் பொறியியல் துறையின் நங்கவள்ளி ரோடு கோனுர் அஞ்சல் உதவி செயற்பொறியாளரை 04298-290361 ஆத்தூர் தென்னங்குடிபாளையம் உதவி செயற்பொறியாளரை என்ற எண்ணிலும், 04282-290585 என்ற எண்ணிலும். சங்ககிரி வட்டம். குப்பனூர் பைப்பாஸ் பகுதியில் உள்ள உதவி செயற்பொறியாளரை 04283 290390 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.