போலியாகச் சொத்துப் பரிமாற்றத்துக்கு உதவியதாக சேலம் மண்டல பதிவுத் துறை துணை ஆய்வாளர் ரவீந்திரநாத்தை சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைது செய்தனர்.
கடந்த 2021ஆம் ஆண்டு தென்சென்னையில் மாவட்ட பதிவாளராக பணியாற்றிய ரவீந்திரநாத், தாம்பரம் அருகே வரதராஜபுரத்தில் உள்ள பல கோடி ரூபாய் மதிப்பிலான 5 ஏக்கர் நிலத்தை, கந்தம்மாள் பெயரில் போலி ஆவணம் மூலம் மாற்றியதாக கூறப்படுகிறது. ஆனால், சம்பந்தப்பட்ட சொத்து வரதராஜபுரத்தைச் சேர்ந்த சையத் அமீனுக்கு சொந்தமானது என்று சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கில் வருவாய்த் துறையைச் சேர்ந்த சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், இதுதொடர்பாக, ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த ஐகோர்ட், இந்த குற்றச்சாட்டு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டது. அதன்படி, சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது, ரவீந்திரநாத் மீதான குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவர் மீது பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து சேலத்தில் தனது வீட்டில் இருந்த ரவீந்திரநாத்தை கைது செய்த போலீசார் அங்கிருந்து வேனில் சென்னைக்கு அழைத்துச் சென்றனர்.