சேலம் புதிய பேருந்து நிலையத்தில் குழந்தைகளுடன் பேருந்துக்காக காத்திருந்த பெண்ணிடம் போதையில் அத்துமீறிய காவலரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கவுதம் கோயல் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே ஓலைப்பட்டியை சேர்ந்தவர் கலையரசன், 35; ஓமலுார் காவல்நிலையத்தில் குற்றத்தடுப்பு பிரிவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில், சேலம் புது பேருந்து நிலையத்தில் குழந்தையுடன் நின்றிருந்த திருப்பூரை சேர்ந்த பெண்ணிடம் கடந்த, 26ம் தேதி அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார். அந்த பெண் கூச்சலிட்டதையடுத்து, காவலர் கலையரசனை சுற்றிவளைத்த பொதுமக்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து, கலையரசன் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த பள்ளப்பட்டி போலீசார், நீதிபதி முன் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். இதையடுத்து, துறை ரீதியான விசாரணை நடத்த எஸ்.பி., கவுதம் கோயல் உத்தரவிட்டார். அதன்படி ஓமலுார் டி.எஸ்.பி., சஞ்சீவ்குமார் விசாரித்து அறிக்கை அளித்தார். இதன் அடிப்படையில் கலையரசனை ‘சஸ்பெண்ட்’ செய்து எஸ்.பி., கோயல் உத்தரவிட்டுள்ளார்.