Mettur Dam | மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருவதால் இன்று காலை அணைக்கு வரும் 1.70 லட்சம் கன அடி நீரும், அணையின் பாதுகாப்புக் கருதி அப்படியே வெளியேற்றப்படுகிறது. 16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் கூடுதல் நீா் திறந்துவிடப்பட்டுள்ளதால், அணையில் இருந்து நீா் சீறிப்பாய்ந்து செல்கிறது. இதனால் மேட்டூர் அனல் மின் நிலையம் சங்கிலி முனியப்பன் கோயில் வழியாக எடப்பாடி செல்லும் சாலையை தண்ணீர் மூழ்கடித்து செல்கிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று காலை முதல் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
மேட்டூரில் இருந்து எடப்பாடி செல்லும் சாலையின் முன்பாக போலீசார் கான்கிரீட் தடுப்புகளை சாலையில் வைத்து போக்குவரத்தை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்தப் பாதை அடைக்கப்பட்டதால் சங்கிலி முனியப்பன் கோயில், நாயக்கன்பட்டி, பொறையூர், செக்கானூர் ஆகிய கிராமங்களுக்கு போக்குவரத்து தடைபட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். பள்ளி வாகனங்கள் இயக்க முடியாததால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு காவிரி கிராஸ் பாலம் வழியாக இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்கின்றனர்.
மேட்டூர் – எடப்பாடி செல்லும் அரசு பேருந்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அனல் மின் நிலைய அதிகாரிகள் அனுமதித்தால், மேட்டூர் அனல் மின் நிலையம் வளாக வழியாக இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Read More : ”இனி பாக்கெட்டுகளில் ரேஷன் பொருட்கள் விற்பனை”..!! முதற்கட்டமாக சேலத்தில் தொடக்கம்..!!