நவரத்திரி, ஆயுதபூஜை, விஜயதசமி, பண்டிகையின் தொடர் விடுமுறை காரணமாக, பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால், சென்னையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய நகரங்களுக்கு செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளது.
தமிழகம் முழுவதும் நவரத்திரி, ஆயுதபூஜை, விஜயதசமி பண்டிகைகள் கொண்டாடப்படவுள்ளது. நாளை முதல் ( அக்.11 ) வரும் 13-ம் தேதி வரை சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. அதோடு சனி, ஞாயிற்றுக்கிழமைகள் சேர்ந்து வருவதால், தொடர் விடுமுறை கிடைக்கிறது. இதையடுத்து, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்கள், தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று, பண்டிகையை சிறப்பாக கொண்டாட முடிவு செய்துள்ளனர்.
பேருந்து, ரயில்களில் முன்பதிவு செய்ய முடியாதவர்கள், இறுதி நேரத்தில் சொந்த ஊர் செல்ல முடிவு செய்தவர்கள், விமான பயணங்களுக்கு முயற்சித்து வருகின்றனர். இதன் காரணமாக, சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து, தூத்துக்குடி, மதுரை, திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், சேலம் ஆகிய விமானங்களின் டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.
அந்தவகையில், சென்னை – மதுரை வழக்கமான விமான கட்டணம் ரூ.4,200 என இருந்த நிலையில் தற்போது ரூ.12,026-லிருந்து 18,626 – ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சென்னை – தூத்துக்குடி விமான டிக்கெட் கட்டணம் ரூ.5006-ல் இருந்து ரூ.11,736 முதல் ரூ.13,626-வரை அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை – கோவை இடையே விமான டிக்கெட் கட்டணம் ரூ.3,290-ல் இருந்து ரூ.10,996-ஆக உயர்ந்துள்ளது. சென்னை – சேலம் இடையே வழக்கமான டிக்கெட் கட்டணம் ரூ.3317-ல் இருந்து 10,792-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
Readmore: சங்ககிரியில் 15 வயது சிறுமிக்கு திருமணம்!. பெற்றோர், கணவர் உட்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு!.