சேலத்தில் வௌவால்களை பாதுகாப்பதற்காக தீபாவளி அன்று பட்டாசு வெடிக்காத அதிசய கிராமம் ஒன்று உள்ளது.
தீபாவளி என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது பட்டாசுகள்தான். தீபாவளிப் பண்டிகைக்கு எண்ணெய்க் குளியல், புத்தாடை, பலகாரம் ஆகிய சிறப்புகள் இருந்தாலும், பட்டாசுதான் பட்டென்று தோன்றும். சிதறும் சங்கு சக்கரங்களும், மின்னி மறையும் மத்தாப்புகளும் ஒலியெழுப்பிச் செல்லும் வெடிகளும் வெடித்தால்தான் தீபாவளி என்று நினைப்பவர்கள் பலர். ஆனால் பட்டாசுகள் இல்லாமலே சில கிராமங்கள் தீபாவளியைக் கொண்டாடி வருகின்றன.
இந்தநிலையில் சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள அய்யாசாமி பசுமை பூங்காவில் பல ஆயிரக்கணக்கான வவ்வால்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றை பாதுகாக்கும் நோக்கில், வவ்வால்களை பாதிக்காத விதத்தில் தீபாவளியைக் கொண்டாட அம்மாபேட்டை மண்டல குழு தலைவர் தனசேகரன் மற்றும் மாமன்ற உறுப்பினர் ஈசன் இளங்கோ உள்ளிட்டோர் தூய்மை பணியாளர்களுடன் இணைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதன்படி சுமார் 5,000 குடும்பங்களுக்கு வாட்ஸ்அப் மூலம் சுற்றுச்சூழலுக்கு வவ்வால்கள் செய்யும் நன்மை குறித்து குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது.
அதோடு தீபாவளிக்கு அதிக ஒளி எழுப்பக்கூடிய வெடிகளை வெடிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்பட்டது. இந்த நிலையில், வவ்வால்களை பாதுகாக்க அங்குள்ள கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.