தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுநாள் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், பூமத்திய ரேகையை ஒட்டிய, கிழக்கு இந்திய பெருங்கடல் மற்றும் அதனையொட்டிய, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நேற்று முன்தினம் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.நேற்றைய நிலவரப்படி, இது அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளது. இன்று மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. சென்னையில் இருந்து 1,050 கி.மீ., தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலவுகிறது.
அதற்கு அடுத்த இரண்டு நாட்களில் மேலும் வலுவடைந்து, தமிழகம், இலங்கை கரையை நோக்கி நகரும். இதனால், தமிழகத்தில் இன்று மாலைக்கு பின், மழை படிப்படியாக அதிகரிக்கும். அதாவது, தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் (நவ. 26, 27) ஆகிய 2 நாட்கள் அதிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால், 12 முதல் 20 செமீ வரை மழை பொழிவிற்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதன்படி, மயிலாடுதுறை, திருவாரூர், நாகை ஆகிய 3 மாவட்டங்கள், காரைக்கால் நாளை அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நாளை விழுப்புரம், கடலூர், தஞ்சை, புதுக்கோட்டை, சிவகங்கை, அரியலூர் ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து, நாளை கடலூர் மற்றும் மயிலாடுதுறை ஆகிய 2 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம், விழுப்புரம் மற்றும் தஞ்சாவூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.