நடிகர் விஜய் சமீபத்தில் தனது தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அறிமுகம் செய்து வைத்தார். அதைத்தொடர்ந்து, தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி பகுதியில் நடைபெற திட்டமிட்ட நிலையில், அதற்காக அனுமதி கேட்டு காவல்துறையிடம் விண்ணப்பிக்கப்பட்டது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த காவல்துறையினர், 21 கேள்விகள் கேட்டிருந்தனர். அதற்கு பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விளக்கம் அளித்திருந்தார்.
இந்நிலையில், இந்த விளக்கத்தை காவல்துறையினர் ஏற்றுக் கொண்டதாகவும் சற்றுமுன் தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்நிலையில், கட்சியின் தலைவர் விஜய் தற்போது ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”கடந்த பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்காக தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தோம். தற்போது அதற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. திசைகளை வெல்லப் போவதற்கான முன்னறிவிப்பாக, இப்போது முதற்கதவு நமக்காக திறந்திருக்கிறது.
இந்நிலையில், நமது கழகத்தின் முதல் மாநாட்டிற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ள நிலையில், அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை காத்திருங்கள். தடைகளை தகர்த்தெறிந்து, கொடி உயர்த்தி, கொள்கை தீபம் ஏந்தி, தமிழக மக்களுக்கான தலையாய அரசியல் கட்சியாக தமிழ்நாட்டில் வலம் வருவோம். வெற்றிக் கொடியேந்தி மக்களை சந்திப்போம்! வாகை சூடுவோம்!” என தெரிவித்துள்ளார்.