நம்முடைய கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் ரண வேதனை இருக்கிறது.ஒரு 20 சீட் கொடுங்கள். ஒரு 50 கோடி கையில் கொடுங்கள். ரூ.100 கோடி கொடுங்கள் என்று கேட்கிறார்கள் என்று திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சியில் அ.தி.மு.க கள ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், 1972-ம் ஆண்டு தொடங்கப்பட்ட அ.தி.மு.க 53-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம், இந்த 53 ஆண்டுகளில் 32 ஆண்டுகள் ஆட்சியில் இருந்திருக்கிறோம் என்று கூறினார். அப்போது, அ.தி.மு.க உடன் கூட்டணிக்கு வரும் கட்சிகள் குறித்துப் பேசிய முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ‘கூட்டணி தொடர்பான விஷயங்களை நான் பார்த்துக்கொள்கிறேன் என்று எடப்பாடி பழனிசாமி கூறிவிட்டார்.

நம்முடைய கூட்டணிக்கு வர வேண்டும் என்றால் ரண வேதனை இருக்கிறது. யார் வந்தாலும் சும்மாவா வருகிறார்கள். ஒரு 20 சீட் கொடுங்கள். ஒரு 50 கோடி கையில் கொடுங்கள். ரூ.100 கோடி கொடுங்கள் என்று கேட்கிறார்கள். ஏதோ நெல், அரிசி விற்பது மாதிரி பேரம் பேசுகிறார்கள். நாம் எங்கே போவது? இப்போது அ.தி.மு.க மார்க்கெட் போய் கொண்டிருக்கிறது. எடப்பாடியாரை தான் மக்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் என்று அந்த கட்சி தலைவர்கள் கூறுகின்றனர்.

அப்போது ஏன் தலைவரே.. ரூபாயை குறைச்சிக்க கூடாதா? என்று சொன்னால்.. இதை வைத்து தான் பிஸ்னஸ் நடத்த வேண்டும் என்று சொல்கிறார்கள். அந்த கொடுமையில் எடப்பாடி மாட்டிக்கொண்டு இருக்கிறார். கூட்டணிக்கு பேசிக் கொண்டு இருக்கிறார். விரைவில் நல்ல செய்தி வரும். கள ஆய்வு என்பது நிர்வாகிகளை உற்சாகப்படுத்துவதுதான். ஆகவே, நிர்வாகிகள் தீவிரமாக செயல்பட்டு கட்சிக்கு வெற்றியைத் தேடி தர வேண்டும்’ என்று திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.

Readmore: வரும் 23ஆம் தேதிக்கு பிறகு பருவமழை தீவிரமடையும்..!! வங்கக் கடலில் உருவாகிறது புதிய புயல்..? தமிழகத்திற்கே அதிக சேதம்..?