தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவிகள் மீதான பாலியல் தொந்தரவு சம்பவங்கள் அடுத்தடுத்து வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. குறிப்பாக, கிருஷ்ணகிரி போச்சம்பள்ளி அருகே உள்ள அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் அதே பள்ளியில் படிக்கும் 13 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் மாநிலம் முழுவதும் அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்த விவகாரத்தில் ஆசிரியர்கள் 3 பேரும் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மூவரும் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டனர்.
இதேபோல், திருச்சி, ஈரோடு, ஒசூர், சிவகங்கை உட்பட பல்வேறு மாவட்டங்களிலும் பள்ளி மாணவிகள் பாலியல் தொந்தரவுகளுக்கு உள்ளான தகவல்கள் சமீபத்தில் வெளியானதால் இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. மாணவர்களுக்கு பாதுகாப்பாக விளங்கக் கூடிய பள்ளிகளில் அரங்கேறும் இத்தகைய கொடூர சம்பவங்கள் பெற்றோர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தின.
இந்தநிலையில், பள்ளிக்கல்வித்துறை உயர் அலுவலர்கள், மாநில குழந்தைகள் ஆணையம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் நடத்தை விதிகளில் திருத்தம் மேற்கொள்ளலாம் கடும் நடவடிக்கை எடுப்பதற்கு வகை செய்யும் வகையில் திருத்தங்கள் மேற்கொள்ள, வரைவு அறிக்கை தயாரிக்கப்படுவதாகவும் மூன்று- நான்கு நாட்களில் வரைவு அறிக்கை வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசும்போது, பாலியல் புகார் வந்தால் உடனே நேரடி ஆய்வுக்கு செல்ல வேண்டும். பாலியல் புகார் குறித்து உடனடியாக தலைமைக்கு தெரிவிக்க வேண்டும். பாலியல் புகார்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும். பாலியல் புகார்களை முறையாக விசாரிக்க தவறியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளிகளில் உள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் மாணவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற வகையில் கருத்துக்களை பரப்பி அரசியல் செய்ய முயற்சி செய்கிறார்கள் அதற்கு இடம் கொடுக்காத வகையில் செயல்பட வேண்டும்.
துன்புறுத்தல்கள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்கும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாவட்ட அளவிலேயே பள்ளிகளில் வரும் போக்சோ புகார்களை முன்னுரிமை கொண்டு விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி அளவில் பிரச்சினைகள் வரும் போதே அதனை சரிசெய்ய முயற்சி செய்ய வேண்டும், என பேசினார். மேலும், போக்சோ வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கல்வி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டு, வேறு எங்கும் பணியாற்ற முடியாத வகையில் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும், ஆசிரியர் திட்டினால் கூட 14417 உதவி மைய எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார்.
பொதுவாக பாலியல் புகாரில் சிக்கும் அலுவலர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டால் அவர்கள் சில நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்படுவதும், மீண்டும் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று இடைக்கால நிவாரணத்தில் இருக்கும் பொழுது மற்றொரு பள்ளியில் பணியில் சேரக்கூடிய நிலை காணப்படுகின்றது. இதனை முற்றிலும் தவிர்ப்பதற்கும், பாலியல் சீண்டலில் ஈடுபடுபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக விதிகளை திருத்தம் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் பள்ளிக் கல்வித் துறையில் பாலியல் புகாரில் சிக்கியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அலுவலக என 238 பேர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் மீது விசாரணை அதிகாரிகள் விரைந்து விசாரித்து முடிவெடுக்க அமைச்சர் அன்பில் அறிவுறுத்தியுள்ளார்.