தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்..
தமிழ்நாடு மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்காக அரசு ஆண்டுதோறும் பாடப்புத்தகங்களை வழங்கி வருகிறது. அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு விலையில்லாமலும், தனியார் பள்ளி மாணவர்களுக்கு குறைந்த விலையிலும் பாடப்புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்நிலையில், தனியார் பள்ளி மாணவர்களுக்கு விற்கப்படும் அரசு பாடநூல் கழக புத்தகங்களின் விலையை பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி புத்தகம் ஒன்றிற்கு, 1-4 வகுப்புகளுக்கான பாட புத்தகம் ரூ.30 முதல் 40 வரையும், 5-7 வகுப்பு பாட புத்தகங்கள் ரூ.30 முதல் ரூ.50 வரையும், 8ஆம் வகுப்பு பாட புத்தகம் 40 முதல் 70 ரூபாய் வரையும், 9-12 வகுப்பு புத்தகங்கள் ரூ.50 முதல் ரூ.80 வரையும், ஒருசில புத்தகங்கள் 90 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளன.
அதன்படி, மொத்த தொகுப்புகளாக பெறும்போது, ரூ.390-க்கு விற்கப்பட்ட ஒன்றாம் வகுப்பு புத்தகங்கள் ரூ.550-க்கும், இரண்டாம் வகுப்பு புத்தகங்கள் ரூ.530-க்கு விற்பனையாகிறது. மூன்றாம் வகுப்பு புத்தகங்கள் ரூ.620-க்கும், நான்காம் வகுப்பு புத்தகங்கள் ரூ.650-க்கும், ஐந்தாம் வகுப்பு புத்தகங்கள் ரூ.710-க்கும், ஆறாம் வகுப்பு புத்தகங்கள் ரூ.1,110-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஏழாம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,200-க்கும், எட்டாம் வகுப்பு புத்தகங்கள் ரூ.310 உயர்ந்து ரூ.1,000-க்கும், ஒன்பதாம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,110-க்கும், பத்தாம் வகுப்பு புத்தகங்கள் ரூ.340 உயர்ந்து ரூ.1,130-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. காகிதங்களின் விலை உயர்வு, அச்சடிப்பதற்கான கட்டண உயர்வு உள்ளிட்ட காரணங்களால் பாடப் புத்தகங்களின் விலை 5 ஆண்டுகளுக்கு பின்பு உயர்த்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரகள் தெரிவித்துள்ளனர்.
Read More : வெள்ளரி வெள்ளி கூட்டுறவு சங்க மோசடி வழக்கு..!! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!