மேட்டூர் அருகே போலீசாரை, வடமாநிலத்தைச் சேர்ந்த பஸ் டிரைவர் மற்றும் கிளீனர் இரும்பு ராடால் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தை சேர்ந்த 30 சுற்றுலாப் பயணிகள், சொகுசு பேருந்தில் தமிழகத்திற்கு ஆன்மிக சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். இவர்கள் நேற்று சேலம் மாவட்டம் மேட்டூர் வழியாக கர்நாடகாவில் உள்ள மாதேஸ்வரன் மலைக்கு சென்றனர். அப்போது, தமிழக – கர்நாடகா எல்லையான காரைக்காட்டில் உள்ள சோதனைச் சாவடியில் பேருந்தை நிறுத்தி அங்கு பணியில் இருந்த தலைமை காவலர்கள் செந்தில்குமார் மற்றும் சுகனேஸ்வரன் ஆகியோர் சோதனை நடத்தி உள்ளனர்.
பஸ்ஸில் மதுபானங்கள் ஏதும் உள்ளதா? பஸ்சுக்கு பர்மிட் உள்ளதா என கேட்டுள்ளனர்? அப்போது திடீரென பஸ் டிரைவருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த டிரைவர் சிவநாராயணன், காவலரின் கன்னத்தில் அறைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த 2 போலீசாரும் அவரை திருப்பி அடித்தனர். இதை கண்டு ஆத்திரமடைந்த பஸ் கிளீனர் அஜய் (20), பஸ்சில் இருந்த இரும்பு குழாயை எடுத்து வந்து, போலீசாரை தாக்கியுள்ளார்.
இதில், இரண்டு போலீசாரும் படுகாயமடைந்தனர். இதற்கிடையே, போலீசார் மீது வடமாநிலத்தினர் தாக்குதல் நடத்தியதை கண்ட அப்பகுதி மக்கள், ஓடி வந்து அவர்களை தாக்கத் தொடங்கினர். இதனால், அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மேட்டூர் டிஎஸ்பி ஆரோக்யராஜ், கொளத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை நடத்தினர். பின்னர், படுகாயமடைந்த இரண்டு காவலர்களும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், காவலர்களை தாக்கிய பஸ் டிரைவர் சிவநாராயணன், கிளீனர் அஜய் ஆகியோரை கொளத்தூர் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், பின்னர் ஜாமீனில் விடுவித்தனர். மேலும், பஸ்சில் பயணிகள் இருந்ததால், நேற்று மாலை போலீஸ் பாதுகாப்புடன் அந்த பஸ்சை தமிழக எல்லையை கடந்து விட்டு வந்தனர். அதே சமயம், இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர் சிவநாராயணன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகாரில், பஸ்சுக்கான உரிய ஆவணங்களை காட்டிய போதும், சோதனைச்சாவடியில் இருந்த போலீசார், தங்களிடம் பணம் கேட்டதாகவும், பணம் தர மறுத்ததால் தங்களை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். இந்த புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.