இந்தியாவில் சிறு, குறு விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்குவதற்காக மத்திய அரசால் பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா திட்டம் கொண்டுவரப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், தகுதியான விவசாயிகளுக்கு தலா ரூ.2,000 வீதம் ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் தொகையை ரூ.6,000இல் இருந்து ரூ.8,000ஆக உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், தற்போதைக்கு அந்த திட்டம் ஏதும் இல்லை என நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துவிட்டது.
கடந்த 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட பிஎம் கிசான் (PM-KISAN) திட்டம், தகுதியுள்ள விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 3 சம தவணைகளில் ரூ.2,000 செலுத்தி வருகிறது. இதுவரை 18 தவணைகளில் ரூ.3.46 லட்சம் கோடியை மத்திய அரசு விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தியுள்ளது. 18-ஆம் தவணை கடந்த அக்டோபர் 5ஆம் தேதி வெளியிடப்பட்டது. தற்போது 19-ஆம் தவணைக்காக விவசாயிகள் காத்திருக்கின்றனர்.
ஆகையால், 2025 பிப்ரவரி முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் 19-ஆம் தவணைக்கான நிதி வரவு வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், 19-ஆம் தவணைக்கான தேதியை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.