சேலத்தில் இரவு நேரங்களில் வடமாநில கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நாளுக்குநாள் வடமாநிலத்தவர்களின் நடமாட்டம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. வேலைத்தேடி அதிகளவில் வடமாநிலத்தவர்கள் தமிழகத்திற்கு படையெடுக்கின்றனர். இதுமட்டுமல்லாமல், பல்வேறு கொள்ளைச் சம்பவங்களிலும் வடமாநிலத்தவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். ஆங்காங்கே போலீசார் எச்சரிக்கையும் விடுத்தும் வருகின்றனர்.

இந்தநிலையில், சேலம் மாவட்டம் சூரமங்கலம் ஆசாத் நகர் பகுதியில் நேற்று நள்ளிரவில் 5 பேர் கொண்ட வடமாநில கும்பல், மாடியில் ஏறி கொள்ளையடிக்க முயன்றுள்ளனர். அப்போது, பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள் உஷாராகி, கொள்ளையர்களை சுற்றிவளைத்தனர். ஆனால், அவர்களை பிடிக்க முயன்றபோது அனைவரும் தப்பியோடிய நிலையில், ஒருவர் மட்டும் சிக்கினார். பின்னர், அவனை கட்டிவைத்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற சூரமங்கலம் போலீசார், கட்டிவைத்திருந்தவரை மீட்டு காவல்நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அப்போது, அவன், ஒடிசாவை சேர்ந்த சந்தன் லிங்கா என்பது தெரியவந்தது. இதையடுத்து, கொள்ளையடிக்கவந்ததை ஒப்புக்கொண்டதையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் தப்பியோடியவர்களை தனிப்படைகள் அமைத்து தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Readmore: அமைச்சராகும் சேலத்தின் முக்கியப் புள்ளி..? முதல்வர் திரும்பி வந்ததும் அடிக்கப்போகும் ஜாக்பாட்..!!