பதுங்கு குழிகள், ரகசிய அறை, சுரங்க பாதை, நிலத்தடி அறைகள் எல்லாம் வரலாற்று புத்தகங்களிலும், செய்திகளிலும் கேட்டிருப்போம். போர் அல்லது ஆபத்து வரும்போது ராஜாக்கள் முதல் சாதாரண மக்கள் வரை நிலத்தடி பாதைகளிலோ, அறைகளிலோ தான் தங்குவார்கள். ஆனால், ஒரு நகரமே நிலத்திற்குள் தான் இருக்கிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா..?

ஆம், வடக்கு ஆப்பிரிக்க நாடான துனிசியாவில் அரபு மொழி பேசும் பெர்பர் இன மக்கள் வாழும் சிறிய நகரம் தான் மட்மதா. தெற்கு துனிசியாவின் வறண்ட பள்ளத்தாக்குகளில் அமைந்துள்ள நிலப்பரப்பில் இந்த நகரம் அமைந்துள்ளது. இங்கு பல படப்பிடிப்புகளும் நடந்துள்ளது. ஆனால், இப்போது இந்த நகரத்தில் வசிக்கும் மக்கள் வெளியேறி வருகின்றனர்.

இங்கு வசிக்கும் பெர்பர் இன மக்கள் பெரும்பாலும் விவசாயம் சார்ந்த தொழில்களை செய்து வருகின்றனர். இவர்களால், மட்மதாவில் உள்ள வறண்ட நிலத்தில் வெப்பத்தில் வாழ முடியாத காரணத்தால், நிலத்தின் அடியில் மண்ணை தோண்டி வாழ்ந்து வருகின்றனர். எளிய கருவிகளுடன் தோண்டக்கூடிய அளவுக்கு மென்மையாக இருக்கும் மணற்கல்லில் முதலில் ஆழமான வட்டக் குழியைத் தோண்டி வீடுகளை கட்டுகின்றனர். குகையின் விளிம்புகளைச் சுற்றி தோண்டப்பட்டு, நிலத்தடி அறைகளை உருவாக்கி ஒரு வீட்டின் அமைப்பை கொண்டு வருகின்றனர்.

ஆனால், 1960-களில் பெய்த கனமழை, வெள்ளத்தில் நிலத்தடி குடியிருப்புகள் சேதமடைந்தது. இருப்பினும் இன்றைய சூழலில் இந்த வீடுகள் அனைத்து நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வீட்டில் ஒவ்வொரு கொல்லைப்புறமும் ஒரு முற்றத்துடன் இணைகிறது. குடும்ப உறுப்பினர்கள் வேலைகளைச் செய்வதற்கும், சமூக ரீதியாக இணைவதற்கும் இது ஒரு மைய இடமாக விளங்குகிறது. துனிசியா ஜனாதிபதி ஹபீப் போர்குய்பா நாட்டை நவீனமயமாக்க முயன்ற போது இந்த நகரமும், அங்குள்ள பெர்பர் மக்களும் பல புதிய வசதிகளை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Read More : சிக்கலில் மாட்டிக் கொண்ட தவெக..!! விஜய் மீது பரபரப்பு புகார்..!! பாயுமா வழக்கு..?