Online scam | தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த ஒருவருக்கு டெலிகிராமில் மர்ம நபர்கள் மூலம் குறுஞ்செய்தி ஒன்று வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியில், மர்ம நபர்கள் கூறும் நிறுவனத்திற்கு ரிவ்யூ கொடுப்பதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அந்த குறுஞ்செய்தியில் கூறியிருந்த நிறுவனத்திற்கு அந்த நபர் ரிவ்யூ கொடுத்துள்ளார். இதன் மூலம் பணமும் சம்பாதித்துள்ளார். பின்னர், அந்த மர்ம நபர்கள் www.intecct.net என்ற இணையதளத்தில் பணம் முதலீடு செய்தால், அதிக பணம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, அந்த மர்ம நபர்கள் ஒரு வங்கிக் கணக்கையும் அவருக்கு அனுப்பியுள்ளனர். இதை நம்பி அவர் மொத்தம் ரூ.55,49,900 பணம் முதலீடு செய்துள்ளார். பின் சந்தேகமடைந்த அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும, சைபர் க்ரைம் காவல்துறையினர் அந்த மர்ம நபரின் வங்கிக் கணக்கை கொண்டு விசாரணை நடத்தி வந்தனர். அதில் அந்த மர்ம நபர்கள் குஜராத்தை சேர்ந்த ஜேய் சவாலியா, மிலப் தக்கர் என்பது தெரிய வந்தது. பின்னர் காவல் துறையினர் கடந்த ஜூலை 23ஆம் தேதி அவர்கள் இருவரையும் கைது செய்து, சூரத் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து, டிரான்சிட் வாரண்ட் பெற்று, தூத்துக்குடிக்கு அழைத்து வரப்படனர். பின்னர், தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவர்களை சிறையில் அடைத்தனர். இதுகுறித்து சைபர் கிரைம் காவல்துறை தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது. மேலும், இந்த குற்றவாளிகளைக் கண்டுபிடித்து குஜராத் வரை சென்று கைது செய்த, காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் பாராட்டினார்.