பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும். ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். 2026 – ல் அதிமுக வெற்றி பெறுவது உறுதி என்று எடப்பாடி பழனிசாமி அதிரடியாக பேசியுள்ளார்.

சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த வனவாசியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று (அக்.23) நடந்தது. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி, ‘ஜனநாயக முறைப்படி இயங்கும் ஒரே இயக்கம் அதிமுகதான். திமுகவில் கருணாநிதி குடும்பத்தை தவிர வேறு யாரும் தலைவர் பதவிக்கு வர முடியாது. கருணாநிதி குடும்பத்தில் பிறந்த ஆண் வாரிசுகள் மட்டுமே திமுகவின் தலைவராக முடியும். ஜெயலலிதா கூறியது போல், எனக்குப் பின்னும் அதிமுகவை யார் வேண்டுமானாலும் வழிநடத்துவார்கள்.

அதிமுக சுதந்திரமாக செயல்படுவதால் தான் எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு கூட கட்சி மறையவில்லை. அதிமுகவில் வாரிசு அரசியல் இல்லை. இதனால் மக்களுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைத்தது. நான் கனவு காணவில்லை. ஸ்டாலின் தான் பகல் கனவு காண்கிறார். 2019- ஆண்டில் நடைபெற்ற எம்பி தேர்தலை காட்டிலும் கடந்த தேர்தலில் நாமக்கல்லில் வெறும் 30 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே அதிமுக வெற்றி வாய்ப்பை இழந்தது. இதன்மூலம் நாமக்கல்லில் திமுகவுக்குதான் சரிவு; அதிமுகவுக்கு அல்ல. நாடாளுமன்ற தேர்தல் வேறு சட்டமன்ற தேர்தல் வேறு. கூட்டணி இல்லாமல் அதிக வாக்குகள் பெற்ற அதிமுகதான் வலுவான கட்சி.

பொய் வாக்குறுதிகளை கொடுத்து திமுக தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களை மறந்து விட்டனர். மத்தியில், குடும்ப உறுப்பினர்களுக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்பதே ஸ்டாலினின் எண்ணம். அதிமுக எண்ணற்ற சாதனைகளை செய்துள்ளது. திமுக ஒரு சாதனையாவது செய்துள்ளதா?

நாமக்கல் மாவட்டத்துக்கு நிறைய திட்டத்தை கொண்டு வந்தது அதிமுகதான். திமுகவின் 41 மாத ஆட்சியில் இந்த மாவட்டத்துக்கு ரூ.40 கோடிதான் ஒதுக்கி உள்ளனர். அதிமுக ஆட்சியில் நாமக்கல் மாவட்டத்துக்குத்தான் அதிக நிதியை ஒதுக்கி பணிகளை செய்துள்ளோம். கனவு உலகத்தில் மிதக்கும் முதல்வர், நாமக்கல் மாவட்டத்துக்கு திமுகதான் நிறைய திட்டங்களை கொடுத்துள்ளதாக பொய்யான தகவலை தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி வலுவான கூட்டணியாகவே இருந்துவிட்டுப் போகட்டும். திமுக கூட்டணி வலுவாக இல்லை என்று நான் சொல்லவில்லை கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளே சொல்கிறார்கள். அதைத்தான் நான் வெளிப்படுத்துகிறேன். தேசிய கட்சியே எங்களை கூட்டணிக்கு அழைத்தது. ஆனால், அதிமுகவுக்கு ஆட்சி, அதிகாரம் முக்கியமில்லை. மக்களுக்கு சேவை செய்வதே அதிமுகவின் நோக்கம். யாருடைய அழுத்தமும் இல்லாமல் நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்சினைகளை பேச வேண்டும் என்பதற்காகவே தேசிய கட்சிகளோடு கூட்டணி வைக்கவில்லை.

பூவை தேடி தேனீக்கள் வருவது போல அதிமுகவை தேடி கூட்டணிக்கு கட்சிகள் தானாக வரும். ஆட்சி மாற்றம் நிச்சயம் வரும். 2026 – ல் அதிமுக வெற்றி பெறுவது உறுதி. தமிழகத்தில் சிறந்த ஆட்சியை அதிமுகவால்தான் தர முடியும் என்று பேசியுள்ளார்.

Readmore: ரேஷன் கடையில் இந்த 15 பொருட்கள் கிடைக்கும்!. அமைச்சர் சக்கரபாணி சொன்ன குட்நியூஸ்!