கர்நாடக அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறப்பது மேலும் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நீர் நிலைகள் எல்லாம் நிரம்பி வழிகின்றன. இதனால் கர்நாடகாவில் உள்ள கேஆர்எஸ், கபினி உள்ளிட்ட அணைகள் நிரம்பியுள்ளன. கபினி மற்றும் கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளான குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்கிறது. இதனால் இரு அணைகளும் முழு கொள்ளளவை எட்டி உள்ளன.

இதனால் இந்த அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு மழை பெய்யாததால், நீர்வரத்து குறைந்த நிலையில், தண்ணீர் திறப்பும் குறைந்துவிட்டது. இந்நிலையில், கே.ஆர்.எஸ்.அணைக்கு நேற்று முன் தினம் மீண்டும் நீர்வரத்து அதிகரித்ததால் அந்த அணை இரண்டாவது முறையாக முழு கொள்ளளவை எட்டியது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து மட்டும் வினாடிக்கு 70 ஆயிரத்து 44 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இதில் காவிரி ஆற்றில் வினாடிக்கு 68,825 கனஅடி நீரும், கால்வாயில் இருந்து வினாடிக்கு 1,219 கன அடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது. 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 2,282.22 அடியாக இருந்தது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 15,965 கனஅடியாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு 20 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டது. நேற்று முன் தினம் தண்ணீர் வெளியேற்றம் வினாடிக்கு 13,542 கனஅடியாக இருந்தது.

இரு அணைகளில் இருந்து தமிழ்நாட்டிற்கு காவிரியில் வினாடிக்கு 90,044 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கே.ஆர்.எஸ். அணை முழுமையாக நிரம்பியதால், அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட வாய்ப்பு உள்ளது. இதனால் காவிரி கரையோர மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் நதி அருகே யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் கால்நடைகளையும் ஆற்றின் அருகே மேய்ச்சலுக்கு கொண்டு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Read More : தீரன் சின்னமலை நினைவு தினம்..!! இதற்கெல்லாம் அனுமதி இல்லை..!! சங்ககிரி ஆர்.டி.ஓ. எச்சரிக்கை..!!