பூலாம்பட்டி காவல்நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சமடைந்த நிலையில், இருவரது பெற்றோர்களையும் நேரில் வரவழைத்து போலீசார் சமாதானம் பேசி அனுப்பி வைத்தனர்.

சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த பூலாம்பட்டி கூடக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தனுஷ் (வயது 20). இவர் டிப்ளமோ முடித்துவிட்டு, கோவையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவர், தினமும் பேருந்தில் சென்று வந்தபோது தக்‌ஷனா ஸ்ரீ (வயது 20) என்ற இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர், ஈரோடு மாவட்டம், பவானி தளவாய்பட்டியை சேர்ந்த மணிகண்டன் என்பவரது மகள் ஆவார். இவர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பிகாம் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்நிலையில், இருவரும் பேருந்தில் செல்லும்போது பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த காதல் விவகாரம் பெற்றோருக்கு தெரியவந்ததால், கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால், கடந்த 16ஆம் தேதி இருவரும் வீட்டை விட்டு வெளியேறி, திருச்செங்கோடு விநாயகர் கோவிலில் திருமணம் செய்து கொண்டனர்.

பின்னர், பாதுகாப்பு கேட்டு பூலாம்பட்டி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். இதையடுத்து, போலீஸ் எஸ்ஐ மலர்விழி, இருவரின் பெற்றோரை நேரில் வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதைத் தொடர்ந்து, இருவரையும் பெற்றோர்கள் ஏற்றுக் கொண்டதால், அறிவுரை கூறி மணமக்களை அவர்களுடன் அனுப்பி வைத்தார்.

Read More : கோடை விடுமுறையில் வேலைக்கு அழைத்த தந்தை..!! கோபித்துக் கொண்டு ரூ.17 லட்சம் பணத்துடன் மாயமான பிளஸ்1 மாணவன்..!! சேலத்தில் அதிர்ச்சி..!!