முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூச திருவிழா கடந்த 5ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி பாதயாத்திரையாக பக்தர்கள் பழனிக்கு வந்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் இன்று நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருக்கல்யாண நிகழ்வில் முத்துகுமார சுவாமி வள்ளி – தெய்வானை சமேதராய் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு மனமுருகி வழிபட்டனர். இதையடுத்து சிகர நிகழ்ச்சியான தைப்பூச தேரோட்டம் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் வெகு விமர்சையாக நடைபெற்றது.

பெரும்பாலான பக்தர்கள் மேள, தாளத்துடன் ஆங்காங்கே கோலாட்டம், கலில், ஒயில் ஆகிய பாரம்பரிய ஆட்டம் ஆடியபடி சென்றனர். மேலும் காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் வருகை தந்தனர். மலையடிவாரத்தில் பக்தர்கள் பால் காவடி, மயில் காவடி, இளநீர் காவடி மற்றும் தீர்த்த குடங்களை எடுத்துக் கொண்டு மேளதாளத்துடன் ஆடிப்பாடி கிரிவலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி வருகின்றனர். பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ள நிலையில் பாதுகாப்பு பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தை மாத அறுவடைக்குப் பிறகு தைப்பூச நாளன்று விவசாயிகள் தங்கள் விளைச்சலில் ஒரு பகுதியை முருகனுக்கு வழங்குவர். 400 ஆண்டுகளுக்கு மேலாக எடப்பாடியில் இருந்து வரும் பக்தர்கள், பழநி முருகனை தங்களுடைய மருமகனாக பாவிப்பர். அதனால் மருமகனுக்கு செய்யும் அத்தனை சடங்குகளையும் அன்று முழுக்கச் செய்வர். தைப்பூசம் பெருவிழாவின் 10 நாள்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தினர் மண்டகப்படி வைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முழுவதும் இருந்தும் பக்தர்கள் வழிபடும் பழனி முருகன் கோவிலில், யாருக்கும் இல்லாத உரிமை எடப்பாடி பகுதியைச் சேர்ந்த பக்தர்களுக்கு மட்டும் இருக்கிறது. சேலம் மாவட்டத்தில் உள்ள எடப்பாடி பகுதியில் இருந்து ஆண்டு தோறும் தைப்பூசத்தில் கலந்து கொள்வதற்கு ஏதுவாக, பக்தர்கள் மாலையிட்டு பாதையாத்திரையை துவங்குவார்கள். அதில் சென்னிமலை முருகன் கோவில், ஊதியூர் வட்டமலை முருகன் கோவில்களில் வழிபாடு நடத்தி நடந்து வருவார்கள்.

மேலும், பழனிக்கு வரும் வழியில், தாராபுரம் கடந்ததும் இருக்கக்கூடிய அமராவதி நதி, நரிக்கல்பட்டியை கடந்ததும் உள்ள மானூரில் உள்ள சண்முகா நதியில் புனித நீராடி இறுதியாக பழனி எல்லைக்கு வருவார்கள். அதைத் தொடர்ந்து, பழனி மலையின் அடிவாரத்தில் உள்ள பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்த அவர்களுக்கு, கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்படும். அதன் பின்னர் நான்கு ரத வீதிகளில் காவடியுடன் உலா வரும் பக்தர்கள் அதன் பின்னர் மலைக்கு செல்வார்கள்.

படிப்பாதை மூலம் மலை கோவிலுக்கு செல்வார்கள். அங்கு அவர்கள் வேண்டி ஏந்தி வந்த காவடிகளை நேர்த்திக்கடனாக செலுத்திவிட்டு, உச்சிக்கால பூஜை, சாயரட்சை கட்டளை பூஜை, அன்னதானம், தங்கரத புறப்பாட்டில் கலந்துகொண்டு பழனி தண்டாயுதபாணியை வழிபடுவார்கள். அதன் பின்னர் ராக்கால கட்டளை பூஜையில் கலந்து கொண்டு அவர்கள் சாமி தரிசனம் செய்வார்கள். இதன் பின்னர் பழனி மலைக்கோவிலில் இரவு முழுவதும் தங்கி வழிபாடு பஜனை பாடல்களை பாடி வழிபாடு நடத்துவார்கள்.மலைக்கோவிலில் இரவு முழுவதும் தங்கி வழிபாடு நடத்தும் உரிமை எடப்பாடி பக்தர்களுக்கு மட்டுமே இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உரிமை கடந்த 360 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளதும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. மேலும், எடப்பாடியில் இருந்து வரும் பக்தர்கள் மற்றவரகளைப் போல் திரும்பிச் செல்லுகையில், பேருந்திலோ அல்லது, மற்ற வாகனங்களிலோ செல்லாமல், மீண்டும் எடப்பாடிக்கு நடந்தே செல்கிறார்கள் என்பதும் ஆச்சரியத்தில் ஆழ்த்தும் மற்றொரு உண்மையாக உள்ளது. தமிழ்நாட்டில் பரவலாக முருகனின் பெயர்கள் குழந்தைகளுக்கு வைக்கப்பட்டாலும், அந்த பழக்கம் வடமொழி மோகத்தால் அது சற்று குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் எடப்பாடி பகுதியில் அந்த வழக்கம் இன்று வரை கடைபிடிக்கபட்டு வருகிறது.

Readmore: தைப்பூச திருநாள்!. சூரபத்மனை அழிக்க பார்வதியிடம் வேல் பெற்ற முருக பெருமான்!. வெளிநாடுகளிலும் கொண்டாடும் பக்தர்கள்!