தீபாவளி பண்டிகையை கொண்டாட சேலம் பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்த கோவையை சேர்ந்தவர் காவிரி ஆற்றில் மூழ்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி காவேரி ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு மின் உற்பத்தி செய்யப்பட்டு வருவதினால் இங்கு காவேரி ஆற்று நீர் பறந்து விரிந்து கடல் போல் காட்சியளிக்கிறது. காவேரி கரையோர பகுதியான நெருஞ்சிப்பேட்டை, பூலாம்பட்டி, கூடக்கல், குப்பனூர் பகுதிகளை இணைத்து மலைச் சார்ந்த பகுதியாக பசுமையான இயற்கை ரம்யமான காட்சி அழிக்கின்றது. அதனாலே இதனை குட்டி கேரளா என அழைக்கப்படுகிறது.
சேலம் மாவட்டம் பூலாம்பட்டி, ஈரோடு மாவட்டம் நெருஞ்சிப்பேட்டை இடையே விசைப்படகு போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இதனால் ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் சேலம் மற்றும் ஈரோடு,நாமக்கல் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை புரிந்து படகு சவாரி செய்து இயற்கையான சூழலை ரசித்து செல்கின்றனர். மேலும், மேட்டூர் அணையிலிருந்து நீர் திறக்கப்பட்டுள்ளதால் பூலாம்பட்டி கதவனைப் பகுதியில் தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது.
இந்தநிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, ஏராளமானவர்கள் பூலாம்பட்டிக்கு சுற்றுலா வந்துள்ளனர். அங்கு, படகு சவாரி செய்தும் மகிழ்ச்சியடைந்தனர். இந்தநிலையில், தீபாவளி கொண்டாடத்திற்காக கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 7 பேர் பூலாம்பட்டி காவிரி ஆற்றிற்கு சுற்றுலா வந்துள்ளனர். காவிரி ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக பாபு(47) என்பவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற பூலாம்பட்டி போலீசார் இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சுற்றுலா வந்த இடத்தில் நீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.