இந்த ஆண்டு ஜூன் 5 ஆம் தேதி முதல் மேலும் மூன்று ஆண்டுகளுக்கு, ஆண்டின் அனைத்து நாட்களிலும் 24×7 திறந்திருக்க அனைத்து கடைகளையும் வணிக நிறுவனங்களையும் தமிழக அரசு அனுமதித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்தது. அதன்படி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் அனைத்து நாட்களும் 24 மணி நேரமும் திறந்திருக்க அனுமதி அளித்து வழங்கப்பட்ட அரசாணை வரும் ஜுன் 4-ம் தேதியுடன் முடிவடைகிறது.

இந்தநிலையில், கடந்த வாரம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் பகுதியில் நடைபெற்ற வணிகர் சங்க மாநாட்டில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு 6 அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர், வணிகர்களுக்காக 6 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், மக்கள் நலன் கருதி 24 மணி நேரமும் கடை திறக்க வழங்கப்பட்ட அரசாணை ஜூன் 4ஆம் தேதியோடு முடியும் நிலையில், மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தார்.

அதனை தொடர்ந்து மேலும் மூன்று ஆண்டுகளுக்கு கடைகள் மற்றும் நிறுவனங்கள் ஆண்டின் அனைத்து நாட்களிலும் 24×7 திறந்திருக்க அனுமதி அளிக்கும் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று மாநில அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வெளியிட்ட அரசாணையின்படி, 1947 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தின் சில பிரிவுகளிலிருந்து 10 அல்லது அதற்கு மேற்பட்ட நபர்களைப் பணியமர்த்திய கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு விலக்கு அளித்தது.