வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்துள்ள தமிழ்நாடு அரசு, வெப்ப அலையால் நேரிடும் மரணங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
சமவெளியில் ஒரே பகுதியில் குறைந்தபட்சம் இரண்டு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸைத் தொடும்போது அல்லது இயல்பிலிருந்து 4.5 டிகிரி செல்சியஸைத் தாண்டும்போது அதை இந்திய வானிலை ஆய்வு மையம் வெப்ப அலையாக அறிவிக்கிறது. அதேபோல மலைப் பிரதேசங்களில் வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸை தாண்டினால், கடலோர பகுதிகளில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் தாண்டினால் அதை வெப்ப அலை என்று குறிப்பிடுகிறோம்.
பொதுவாக நீரிழப்பு, சோர்வு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் இந்த வெப்ப அலையால் ஏற்படுகிறதாம். குறிப்பாக அதீத வெப்பத்தால் Heat Cramps அதாவது 102°F காய்ச்சலுடன் உடலில் வீக்கம் மயக்கம் ஏற்படும். அதேபோல வெப்ப சோர்வு- பலவீனம், தலைச்சுற்றல், தலைவலி, குமட்டல், வாந்தி, தசைப்பிடிப்பு ஏற்படும். மேலும், உடல் வெப்பநிலை 40°C அதாவது 104°F அல்லது அதற்கும் அதிகமாகச் செல்லும் போது மயக்கம், வலிப்பு மற்றும் கோமாவை ஏற்படுத்தும் ஹீட் ஸ்ட்ரோக் கூட ஏற்படும் ஆபத்துகள் அதிகம். சில நேரங்களில் வெப்ப அலையால் உயிரிழப்பும் ஏற்படுகிறது.
இந்த நிலையில், வெப்ப அலையை மாநிலப் பேரிடராக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசிதழ் வெளியிட்டுள்ளது. வெப்ப அலையால் நேரிடும் மரணங்களுக்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணம் மாநிலப் பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வெப்ப அலையை எதிர்கொள்வதற்கான மருத்துவ வசதிகள் மற்றும் ஓ.ஆர்.எஸ். கரைசல் வழங்குவதற்கும், தண்ணீர் பந்தல்கள் அமைத்து, குடிநீர் வழங்குவதற்கும் மாநில பேரிடர் மேலாண்மை நிதியை பயன்படுத்திக்கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.